புகைப்பிடிப்பவர்களும், மது அருந்துபவர்களும் தனது நடைபயணத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மோதல் தடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜனவரி 2 ஆம் தேதி முதல் சமத்துவ நடை பயணம் மேற்கொள்ள உள்ளார். இதை முன்னிட்டு வைகோ தலைமையில் சென்னையில் உள்ள அக்கட்சித் தலைமையகத்தில் சமத்துவ நடைபயணத்திற்கு வீரர்கள் நேர்காணல் நடைபெற்றது.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “கஞ்சா போன்ற போதை பொருட்கள் வைத்திருப்போருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டு சிறை தண்டனையும், அதை பயன்படுத்துவோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும் அவர் கூறுகையில், “கல்லூரிகளில் சாதி அடிப்படையில் சங்கம் வைக்கக் கூடாது என்றும் சாதி, மத ரீதியிலான மோதல்கள் நடக்கக் கூடாது. எனது சமத்துவ நடை பயணத்தில் புகைப்பிடிப்பவர்களும், மது அருந்துபவர்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.” என வைகோ தெரிவித்தார்.
