தவெகவில் இணைகிறீர்களா? என்கிற செய்தியாளர்களின் கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் சென்றது தமிழ்நாடு அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், டிடிவி தினகரன் தலைமையில் ”அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்”, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ”அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம்” என்றும் பல கூறுகளாக பிரிந்து கிடக்கிறது.
அதிமுக ஒன்றிணையும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்த பலர் திமுக உள்ளிட்டக் கட்சிகளுக்கு இடம் பெயர்ந்தனர். இது ஒரு புறமிருக்க, அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலால் தேர்தல்களில் தோல்வியடைந்ததாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பகிரங்கமாக அறிவித்து அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பு நடத்தி தெரிவித்தது, கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவரது பதவிகள் அனைத்தையும் பறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கடந்த 30ம் தேதி மதுரையில் நடந்த தேவர் குரு பூஜை நிகழ்வுக்கு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் செங்கோட்டையன் பயணித்தார். பின்னர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடனும் சேர்ந்து 3 பேரும் ஒன்றாக மரியாதை செலுத்தினர்.
அப்போது வந்த சசிகலாவையும் செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இந்த நிகழ்வை அடுத்து அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக செங்கோட்டையன் அறிவித்திருந்த நிலையில், அவர் நடிகர் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்நிலையில் சென்னை செல்வதற்காக செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், ”தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறீர்களா?” என கேட்டனர். இந்த கேள்விக்கு நேரடியாக மறுப்பு தெரிவிக்காத செங்கோட்டையன், ”50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து, இயக்கத்திற்காக உழைத்த எனக்கு தரப்பட்டுள்ள பரிசானது உறுப்பினராக கூட இருக்கக்கூடாது என்ற முறையில் நீக்கப்பட்டு இருக்கிறேன்.
இந்த மனது வேதனை அடைந்துள்ளது என்பது உங்களை போன்றோருக்கு நன்றாக தெரியும். அதற்கு மேல் எந்த கருத்தையும் சொல்வதற்கு இல்லை” என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தவெகவில் இணைவது குறித்த கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காமல் பொறுப்பு பறிப்பு தொடர்பாக பேசியிருப்பது யூகங்களுக்கு வலுவூட்டும் விதமாக அமைந்துள்ளதாக பார்க்கப்பட்டாலும், கே.ஏ. செங்கோட்டையன் நிலைப்பாடு தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரச் செய்துள்ளது.
