சிவகங்கை திருப்புவனம் அருகே உள்ள அம்பலத்தாடி கிராமத்தில், சுமார் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால பெருமாள் கோயில் அமைந்திருந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம், அம்பலத்தாடி கிராமத்தில் சமீபத்தில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இங்கு சுமார் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால பெருமாள் கோயில் அமைந்திருந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு வரும் மதுரை காமராசர் பல்கலைக்கழக முதுகலை மாணவர் வினோத், கூறுகையில், “இந்த கிராமம் பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில், சதுர்வேதி மங்கலமான பிராமண குடியிருப்பாக இருந்ததாகத் தெரிய வருகிறது. அப்போது வழிபாட்டில் இருந்த பெருமாள் கோயில் காலப்போக்கில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து விட்டது. ஆய்வின்போது 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர்காலக் கல்வெட்டுத் துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்து, ‘ஒன்று’ என்ற ஒரே சொல்லை மட்டுமே வாசிக்க முடிந்து உள்ளது.
மேலும், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட சிலைகள் உருக்குலைந்து சிதைந்த நிலையில் கிடைத்துள்ளன. 72 செ.மீ உயரத்துடனும், 38 செ.மீ அகலத்துடனும் காணப்படும் பெருமாள் சிலையில் சங்கு, சக்கரம் தெளிவாக வடிக்கப்பட்டிருப்பது காணப்படுகிறது. ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் முற்றிலும் உடைந்த நிலையில் உள்ளன. தலைக்கிரீடம் அணிந்த கருடாழ்வார் சிலையும் தொடை முதல் கீழ் பகுதி உடைந்து கிடக்கிறது.” என தெரிவித்தார்.
தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, ” அம்பலத்தாடி கிராமத்தில் முன் காலத்தில் இருந்த கோயில் அழிவுற்ற நிலையில், பின்னர் மீண்டும் கட்டப்பட்டிருக்கலாம். தற்போது கிடைத்த சிலைகள் வெவ்வேறு காலத்தைச் சார்ந்திருப்பதால் இதை உறுதிப்படுத்த முடிகிறது.” என தெரிவித்தார்.
மேலும், ஊரின் பல இடங்களில் கோயிலின் கல் பாகங்கள் சிதறிக் கிடப்பதாகவும், ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறினர்.
