திருப்பத்தூர் அருகே 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலியான 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த கோர விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் நிவாரணமாக அறிவித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
திருப்பத்தூரிலிருந்து காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. பிள்ளையார்பட்டி அருகே நேற்று மாலை நிகழ்ந்த இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளின் முன்பகுதிகளும் முற்றிலும் நொறுங்கின.
இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்த நிலையில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்தது. மேலும் காயமடைந்த 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த கோர விபத்து குறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் இரண்டு பேருந்துகளும் அதிவேகமாக இயக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
