வங்கிகளில் பண மோசடி செய்தது தொடர்பான வழக்கில் சிக்கி வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையா, லலித் மோடி இருவரும் லண்டனில் நடைபெற்ற பர்த்டே பார்ட்டியில் குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக திகழ்ந்தவர் விஜய் மல்லையா. மதுபான தொழில் மற்றும் விமான சேவைகளில் விஜய் மல்லையா நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தன. கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா, தங்களது நிறுவனங்கள் பெயரால் இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ரூ9,000 கோடி கடன்களைப் பெற்றார். வங்கிகளும் மல்லையாவுக்கு சளைக்காமல் கடன்களைக் கொடுத்தன. ஆனால் மல்லையா வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் இந்தியாவை விட்டு தப்பி ஓடிவிட்டார். இந்தியாவை விட்டு தப்பி ஓடி இங்கிலாந்தில் சொகுசு வாழ்க்கை வந்தார் மல்லையா.
இதேபோல், கடன் மற்றும் பண பரிமாற்றத்தில் மத்திய நிதி மற்றும் அமலாக்க துறையினர் மூலம் தேடப்படும் நபராக லலித்மோடியும் உள்ளார். இந்தநிலையில், லலித் மோடி தனது 63வது பிறந்தநாளை லண்டனில் அண்மையில் கொண்டாடினார். கடந்த வார இறுதியில் நடைபெற்ற விருந்தில் விஜய் மல்லையாவும் கலந்து கொண்டார். கொண்டாட்டத்தின் வீடியோக்களை லலித் மோடி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
லண்டனின் மேஃபேரில் உள்ள விலையுயர்ந்த மடாக்ஸ் கிளப்பில் இந்த விருந்து நடைபெற்றது. இந்த கிளப்பில் ஒரு மேஜையை புக்கிங் செய்ய குறைந்தபட்சம் ஆயிரம் பவுண்டுகள் (சுமார் ரூ. 1.18 லட்சம்) கட்டணம் ஆகும். விருந்தில் நண்பர்கள் மத்தியில் கேக் வெட்டி நடனமாடும் காட்சிகள் வீடியோக்களில் இடம்பெற்றுள்ளன.
