வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து வரும் 9 முதல் 10ம் தேதி வரை மக்களவையில் விவாதம் நடைபெற உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ம் தேதி தொடங்கியது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்த விவாதிக்கக் கோரி முதல் நாளிலேயே நாடாளுன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். கூட்டத்தொடரின் 2வது நாளான இன்றும் (டிச. 2) SIR குறித்து விவாதம் நடத்தக் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதுகுறித்து ஒத்திவைப்பு நோட்டீசும் அளித்தனர். அதற்கு அனுமதி மறுக்கவே அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மக்களவை மற்றும் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து 2 நாட்களாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
இதனிடையே மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், வந்தே மாதம் பாடல் இயற்றி 150 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, வரும் 8ம் தேதி மக்களவையில் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது. சுமார் 10 மணி நேரம் நடைபெற உள்ள இந்த விவாதத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார். மேலும், டிசம்பர் 9ம் தேதி SIR உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதம் நடைபெறும் என்றும் இதற்கும் 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் முடிவு செய்யப்பட்டது. இந்த விவாதத்திற்கு டிசம்பர் 10ம் தேதி மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால் பதில் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராகவே உள்ளதாகவும், ஆனால், எதிர்க்கட்சிகள் காலக்கெடு விதிக்கக்கூடாது என்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
