தன்னிகரற்ற தைரியம், உறுதிப்பாட்டுடன் நமது கடற்படை செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
உலகின் முதல் 10 பெரிய கடற்படை சக்திகளில் ஒன்றாக விளங்கும் இந்திய கடற்படை தினம் இன்று (டிசம்பர் 4ஆம் தேதி) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி டிசம்பர் 1 முதல் 7ஆம் தேதிவரை கடற்படையின் பணிகளை சிறப்பிக்கும் பல வகை கொண்டாட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்தநிலையில், கடற்படை தினத்தையொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடற்படை தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்திய கடற்படை வீரர்கள் அனைவருக்கும் இந்த நாளில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நம் கடற்படை வீரர்கள் அசாதாரண தைரியம், உறுதி ஆகியவற்றின் அடையாளமாக திகழ்கின்றனர். நாட்டின் கடலோரங்களையும், கடல் வர்த்தக நலன்களையும் திறம்பட பாதுகாத்து வருகின்றனர்.
சமீப ஆண்டுகளில், இந்திய கடற்படை தன்னிறைவு மற்றும் நவீனமயமாக்கல் ஆகிய இரண்டையும் நோக்கி முன்னேறி வருகிறது. இது நம் நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தீபாவளியை ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் கடற்படை வீரர்களுடன் கொண்டாடிய தருணத்தை மறக்க முடியாது. இந்திய கடற்படையின் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைய என வாழ்த்துகின்றேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
