மத்திய அரசு பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் வாரியத் தலைவர் நவ்னீத் குமார் சேகல் ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
பிரசார் பாரதி என்பது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இதுவே தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ ஆகியவற்றை நிர்வகிக்கிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்த நவ்நீத் குமார் செகல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 4 ஆண்டுகளாக காலியாக இருந்த தலைவர் பதவியில், அவர் மார்ச் 2024ல் பொறுப்பேற்றார். ஆனால் 2 ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில் அவர் பதவி விலகியுள்ளார். பதவியேற்ற ஒன்பது மாதங்களில் அவர் விலகியிருப்பது, மத்திய அரசின் உயர்மட்ட நிர்வாகத்தில் உள்ள சர்ச்சைகளையும் கேள்விகளையும் சுட்டிக்காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1988 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உத்தரப் பிரதேச கேடரான இந்திய நிர்வாகப் பணி (IAS) அதிகாரியான செகல், மார்ச் 16, 2024 அன்று இந்தியாவின் பொது சேவை ஒளிபரப்பாளரின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஜூலை 2023 இல் உத்தரப் பிரதேச அரசின் கூடுதல் தலைமைச் செயலாளராக சிவில் சர்வீசஸில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இந்தப் பதவிக்கு மூன்று ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டார். தனது 35 ஆண்டுகால வாழ்க்கையில், மாநில மற்றும் மத்திய மட்டங்களில் பல்வேறு பதவிகளை வகித்து, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களில் முக்கிய பங்கு வகித்தார்.
ஊடகம், மக்கள் தொடர்பு, பொது நிர்வாகம், நிதி, தொழில், சட்டம் மற்றும் ஒழுங்கு, நில மேலாண்மை மற்றும் உள்துறை போன்ற துறைகளில் விரிவான அனுபவத்துடன், மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டும் அவருக்கு குறிப்பிடத்தக்க பொறுப்புகளை ஒப்படைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
