ஆஸ்திரேலிய இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில் இன்று இரண்டாவது போட்டி தொடங்கியது. இந்த இரண்டாவது போட்டி பகல் இரவு ஆட்டமாக காபாவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்து இருக்கிறது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக 135* ரன்கள் எடுத்து ஜோ ரூட் களத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக ஜாக் க்ராலி 76 ரன்கள் எடுத்திருக்கிறார்.
முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற மிட்செல் ஸ்டார்க் இந்த போட்டியிலும் ஆறு விக்கெட் எடுத்து தனது அதிரடியை காட்டி இருக்கிறார்.
ஜோ ரூட் செய்த சாதனை :
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் தற்பொழுது உள்ள வீரர்கள் மத்தியில் ஜோ ரூட் தனித்துவம் மிக்க வீரர். அதனாலயே ஐசிசி அவர் டெஸ்ட் தரவரிசை புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். நிறைய நாடுகளில் விளையாடி வரும் அவர் இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு சதம் கூட அடித்ததில்லை.

அந்தக் குறையை இன்று அவர் போக்கி இருக்கிறார். தன்னுடைய நாற்பதாவது டெஸ்ட் சதத்தை ஆஸ்திரேலியா மண்ணில் எடுத்து விமர்சகர்கள் அனைவரது விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹேடன், “ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஜோ ரூட் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்றால் நான் நிர்வாணமாக நடக்க தயார் என்று பகிரங்கமாக சவால் விட்டிருந்தார். நல்ல வேலையாக இன்று ஜோ ரூட் ஒரு சதம் எடுத்துவிட்டார்.

பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ராபின் ஸ்மித் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி இயற்கை எய்தினார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இங்கிலாந்து ஆஸ்திரேலியா வீரர்கள் அனைவரும் தங்களது கைகளில் கருப்பு பேண்ட் அணிந்து கொண்டனர். மேலும் போட்டி நடப்பதற்கு முன்பு அவருக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

