சினிமா துறையில் கேஸ்டிங் கவுச் இல்லை என்று பலர் மறுத்தாலும் அது எங்கேயோ ஒரு மூலையில், அருவருக்கத்தக்க மனிதர்களால் நடத்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. கேஸ்டிங் கவுச் என்பது ஒரு தொழிலை நாம் பெறுவதற்காக பாலியல் ரீதியாக அவர்களுக்கு சலுகையை வழங்குவது. அதாவது சினிமா துறையில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு வரும் நடிகைகளிடம் பாலியல் ரீதியான சலுகையை எங்களுக்கு கொடுத்தால்தான் உங்களுக்கு நாங்கள் பட வாய்ப்பு கொடுப்போம் என்று சொல்வதுதான் கேஸ்டிங் கவுச்.
தெலுங்கு திரையுலகையை சேர்ந்த மூத்த நடிகை ஆன மிர்ச்சி மாதவி 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடத்தி இருக்கும் அவர் தன் வாழ்வில் நடந்த ஒரு கசப்பான அனுபவத்தை ஒரு காணொளியில் பகிர்ந்திருக்கிறார்.
“ஆரம்பத்தில் என்னுடைய நடிப்புத் திறமையை மூலம் நிறைய பட வாய்ப்புகளை பெற்றேன்.100% லவ் வித் குரு என்கிற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அந்த திரைப்படத்திற்கு பின்பு எனக்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. அதில் அடுத்த படத்தில் நீங்கள் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு மனைவியாக நடிக்கப் போகிறீர்கள். ஆனால் அந்த வாய்ப்பு உங்களுக்கு வேண்டுமென்றால் ஒரு ஐந்து பேருக்கு நீங்கள் பாலியல் ரீதியான சலுகை வழங்க வேண்டும் என்று கேட்டனர். நான் எந்த வித வாக்குவாதமும் செய்யாமல் நான் அப்படிப்பட்ட ஆள் அல்ல என்றும் எனக்கு இந்த வாய்ப்பு வேண்டாம் என்றும் கூறிவிட்டேன்.
இதனைத் தொடர்ந்து ஒரு அறிமுக இயக்குனர் தொலைபேசியில் என்னை அழைத்து உங்களுக்கு கதை சொல்லலாமா என்று கேட்டார். நானும் சரி என் வீட்டுக்கு வாருங்கள் என்று கூறினேன். வீட்டிற்கு வந்த அவர் சற்று நேரம் பேசிய பின்பு என்னை சேலை அணிந்து வர சொன்னார். பின்பு உங்களது இடுப்பு பகுதியை நான் பார்க்கலாமா என்று கேட்டார். “நான் செருப்பை கழட்டி உங்களை அடித்து விடுவேன் என்று கூறி விரட்டி அனுப்பி விட்டேன்”, இவ்வாறு தனக்கு நடந்த நிகழ்வுகளை மிர்ச்சி மாதவி அந்தக் காணொளியில் கூறியிருக்கிறார்.
திரைத்துறை மட்டுமல்ல மாடலிங் துறை அவ்வளவு ஏன் ஒரு சில பணியிடங்களில் கூட இது மாதிரியான தொந்தரவு பெண்களுக்கு மட்டுமல்ல ஒரு சில ஆண்களுக்கும் நடந்து கொண்டிருப்பது தான் உண்மை. யாரேனும் இப்படி பாலியல் ரீதியான சலுகையை செய்ய சொல்லி வற்புறுத்தினால், தயக்கம் இன்றி காவல் நிலையத்துக்கு சென்று அவர்கள் மேல் வழக்குப்பதிவு தான் சிறந்த வழி.

