பணி நேரத்திற்கு பிறகு அல்லது விடுமுறை நாட்களில், தனியார் நிறுவனங்கள் வேலை தொடர்பான மின்னஞ்சல்கள் மற்றும் போன் கால் அழைத்தால் அதற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது குறித்த தனிநபர் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே இந்த மசோதாவை தாக்கல் செய்த நிலையில், இந்த மசோதா வாக்கெடுப்புக்கு அனுப்பப்படும் என்றும், அதன் பின் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு நாட்களிலும், பணி நேரம் முடிந்த பின்னரும் அலுவலக மேல் அதிகாரிகளிடமிருந்து மின்னஞ்சல் வந்து அந்த பணியை முடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த “Right to Disconnect Bill” (தொடர்பைத் துண்டிக்கும் உரிமை மசோதா) என்பது, பணியாளர்கள் அலுவலக நேரத்திற்குப் பிறகு வேலை தொடர்பான அழைப்புகள், மின்னஞ்சல்கள் மற்றும் பிற தகவல்தொடர்புகளுக்குப் பதிலளிக்க மறுக்கும் சட்டப்பூர்வ உரிமையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
இந்த மசோதாவில் பணியாளர்கள் அலுவலக நேரம் முடிந்த பிறகும், விடுமுறை நாட்களிலும் வேலை தொடர்பான எந்தவொரு மின்னணுத் தகவல்தொடர்புகளுக்கும் (அழைப்புகள், மின்னஞ்சல்கள், மெசேஜ்கள்) பதிலளிக்க வேண்டியதில்லை. ஒருவர் அலுவலக நேரம் முடிந்த பிறகு அழைப்புகளுக்குப் பதிலளிக்க மறுத்தால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது.
பணியாளர் தனது விருப்பத்தின் பேரில், அலுவலக நேரத்திற்குப் பிறகு வேலை செய்ய ஒப்புக்கொண்டால், அவருக்குச் சாதாரண ஊதிய விகிதத்தில் ஓவர் டைம் சம்பளம் வழங்கப்பட வேண்டும். இது ஊதியம் இல்லாத ஓவர் டைம் வேலைகள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது. இந்த உரிமையைப் பாதுகாக்கவும், நிறுவனங்கள் விதிகளைக் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்தவும் ‘ஊழியர்கள் நல ஆணையம்’ (என்ற ஓர் அமைப்பு உருவாக்கப்படும் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
