கடந்த 17 ஆண்டுகளுக்கு பிறகு ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கான ஸ்தலமாக விளங்கும் காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ ஏலவார்குழலி உடனுறை ஏகாம்பரநாதர் திருக்கோயில் 3500 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.29 கோடி மதிப்பில் கோயில் ராஜா கோபுரம், 1000 கால் மண்டபம், மூலவர் என அனைத்து பகுதிகளும் புராணமைப்பு செய்யப்பட்டு பூரண கும்ப மகா கும்பாபிஷேகம் இன்று (டிச.08) நடைபெற்றது.
இன்று அதிகாலை 5:45 மணிக்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மூன்று நாட்களாக யாக சாலையில் நடத்தி வந்த யாகங்கள் முடிவுற்ற நிலையில் மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டு, அதிகாலை 4:30 மணியளவில் புனித நீர் கலசத்தை ஊர்வலமாக கோபுரங்களுக்கு எடுத்து சென்றனர்.
கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்த பின்பு, காலை 6:30 மணியளவில் மூலவர்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வருகை தந்த 40க்கும் மேற்பட்ட ஓதுவாமூர்திகள் பக்க இசைக்கருவிகளுடன் திருமுறை பாராயணம் பாடினர். கோயில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில், ரிஷி கோபுர நுழைவு வாயிலில் கோயில் பெயரை மலர்களால் எழுத்துக்கள் கோர்க்கப்பட்டு, பக்தர்களை கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் கோயில் சன்னதி வழியாக மட்டுமே அனுபதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ராஜ கோபுரத்தில் இருந்து ஆலயத்துக்கு உள்பகுதியில் வரிசையாக வருவதற்கு காவல்துறையினர் தடுப்புகளை அமைந்துள்ளனர். ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் விழாவை ஒட்டி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 4 மாவட்டத்தை சேர்ந்த 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இரண்டு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் போலீசார் சிறிய கோபுரம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகள், கோயிலுக்கு அருகே உள்ள கிராம பள்ளிகள் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 149 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவிட்டிருந்தார். இதன் பின் 12 மணியளவில் மஹா அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடைபெற உள்ளன.
