சென்னையில் கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக பிபி மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு சீரியல் நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலகில் பெண் நடிகைகள் மற்றும் துணை நடிகைகள் கடினமாக உழைத்து முன்னேறி வருகின்றனர். ஆனால், குடும்ப சிக்கல் அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகளால் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். இதுபோன்ற செய்திகள் பலருக்கும் அதிர்ச்சியை தருகிறது. தற்கொலை என்பது தொடர்கதையாகி வருகிறது. நடிகர் சாய் பிரஷாந்த் தொடங்கி VJ சித்ரா வரை இதுபோன்ற அதிர்ச்சிகரமான முடிவுகளை எடுத்த எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியலில் நடித்த நடிகை ராஜேஸ்வரி(39) கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். சென்னை பிராட்வே தாயப்பன் முதலித் தெருவில், சீரியல் நடிகை ராஜேஸ்வரி (39) மற்றும் சதீஷ் இருவரும் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு, மகன் மற்றும் மகளுடன் குடும்பமாக வசித்து வந்துள்ளனர்.
ராஜேஸ்வரியின் கணவர் SVS ஆயில் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். சீரியல் நடிகை ராஜேஸ்வரி பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியலில் நடித்து வந்துள்ளார். ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவர் சதீஷ் இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு சண்டையிட்டு வந்துள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவன் மனைவி இருவருக்கும் குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. குடும்ப பிரச்சினையின் காரணமாக தனது கணவனை விட்டு கடந்த திங்கட்கிழமை அன்று சைதாப்பேட்டை விஜிபி சாலையில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு ராஜேஸ்வரி சென்றுள்ளார்.
அங்கு சென்ற பிறகும் மன உளைச்சலில் இருந்த ராஜேஸ்வரி, அவரது தாயாரின் பிபி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுள்ளார். இதனை அறிந்த தாயார், உடனடியாக ராஜேஸ்வரியை அருகில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி சிகிச்சை ராஜேஸ்வரிக்கு அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
