2025 யு19 ஆசியக்கோப்பை தொடரின் யுஏஇ அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷியின் மிரட்டல் ஆட்டத்தால் இந்திய அணி 433 ரன்கள் எடுத்துள்ளது.
ஆண்கள் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பை 2025 இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கமாக அமைந்தது. துபாயில் உள்ள ஐ.சி.சி அகாடமி மைதானத்தில் நடந்த முதல் போட்டியிலேயே இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக விளையாடினார். டி20 வடிவத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்த சூர்யவன்ஷி, இப்போது ஒருநாள் போட்டியிலும் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்,
2025 யு19 ஆசியக்கோப்பை தொடர் இன்று (டிசம்பர் 12) தொடங்கி டிசம்பர் 21ஆம் தேதிவரை துபாயில் நடைபெறுகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாள், மலேசியா, யுஏஇ, இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின. இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குரூப் ஏ-ல் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, மலேசியா அணிகளும், குரூப் பி-ல் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, மலேசியா அணிகளும் இடம்பிடித்துள்ளன. இந்நிலையில் இன்று தொடங்கிய ஆசியக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி – யுஏஇ அணிகள் விளையாடுகின்றன.
முதலில் டாஸ் வென்ற யுஏஇ அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி-ஆயுஷ் மாத்ரே ஆகியோர் களமிறங்கினர். கேப்டன் ஆயுஷ் மாத்ரே 4 ரன்களில் ஆட்டமிழந்தாலும், சூர்யவன்ஷி தனது கிளாசிக் ஷாட்களையும், பவர்-ஹிட்டிங் திறமையையும் வெளிப்படுத்தினார். வெறும் 30 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், பின்னர் 56 பந்துகளில் ஒரு பரபரப்பான சதத்தை அடிக்க கியரை மாற்றினார். தொடர்ந்து 14 சிக்சர்கள் 9 பவுண்டரிகளை பறக்கவிட்ட சூர்யவன்ஷி 95 பந்துகளில் 171 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதன் மூலம் 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 433 ரன்களை சேர்த்துள்ளது இந்திய அணி.
இதையடுத்து களம் இறங்கியுள்ள யுஏஇ அணி தற்போதைய நிலவரப்படி, 3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 19 ரன்களுடன் விளையாடி வருகிறது.
