பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில், அதிமுக கூட்டணியில் பாமகவை சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரப்படுத்தியுள்ளன. அந்தவகையில், தமிழகத்தின் வடமாவட்டங்களில் கணிசமாக வாக்கு வங்கியை வைத்துள்ள பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுக தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும், பாமகவில் நிலவும் தந்தை – மகன் இடையேயான பிரச்சனை கூட்டணிக்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. இருப்பினும் அதிமுக கூட்டணிக்குள் அவர்களை கொண்டு வர முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.
பாமக வாக்குகள் பிரிந்துவிடாமல் தடுக்க இருவரையும் சமாதானப்படுத்தி ஒரே சின்னத்தில் போட்டியிட செய்ய அதிமுக விரும்புவதாக தெரிகிறது. இதற்காக இருதரப்பினரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாமகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் சரி பாதியை ராமதாஸ் தரப்பு கேட்பதாகவும், நான்கில் 3 பங்கு தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என அன்புமணி தரப்பும் நிபந்தனை விதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பாமகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் 50% ஐ ராமதாஸ் கேட்கும் நிலையில், 75% ஐ கேட்டு அன்புமணி முரண்டு பிடிப்பதாகவும் கூறப்படுகிறது.
