ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் தேமுதிக மாநில மாநாட்டுக்கு பிறகு கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி, கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா மரியாதை செலுத்தினார். இதையடுத்து, விஜயகாந்த் நினைவிடத்துக்கு வந்திருந்த மக்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் உணவு வழங்கினார்.
தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”விமானம் தாமதம் காரணமாக விஜய பிரபாகரன் வரவில்லை. தேமுதிகவில் விரைவில் உரிய நேரத்தில் விருப்ப மனு விநியோகம் குறித்து அறிவிப்போம். கேப்டன் குரு பூஜைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. உள்ளம் தேடி, இல்லம் நாடி பிரசார பயணம் வெற்றிகரமாக 3 கட்டங்கள் நடந்து முடிந்துள்ளது.
அனைத்து இடங்களிலும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான பணிகள் முடிவடைந்து, தேர்தலுக்கு தேமுதிக தயாராக உள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநில மாநாட்டுக்காக கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர். கடலூர் மாநாட்டில் நல்ல அறிவிப்பு வெளியாகும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல பொங்கலுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் அரசியலுக்கு ஒரு நல்ல வழி பிறக்கும்.
தேமுதிக நிர்வாகிகளுடன் தேர்தலுக்கான ஆலோசனை தினந்தோறும் நடைபெற்று வருகிறது. தேமுதிக நிர்வாகிகளுடன் தினமும் பேசி வருகிறோம். கேப்டன் இருந்த காலத்தில் இருந்தே தேமுதிகவுக்கு மாநில கட்சிகளும், ஒன்றிய கட்சிகளும் தோழமை கட்சிகள்தான். தேமுதிகவுடன் அனைவரும் தோழமையோடும், நட்போடும் உள்ளனர். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
கூட்டணி முடிவை எடுக்க தேமுதிக கொஞ்சம் கால அவகாசம் எடுத்துள்ளது. கூட்டணி குறித்தோ அல்லது யாருடன் கூட்டணி அமைப்பது? என்பது குறித்தோ உரிய நேரத்தில் நல்ல தகவல் அளிப்போம். ஜனவரி 9 ஆம் தேதி நடைபெறும் மாநாட்டுக்குள் கூட்டணி குறித்து நல்ல முடிவு வரும். தேமுதிக நிர்வாகிகள் தொடர்ந்து களத்தில் உள்ளனர்.
யாருடன் கூட்டணி? எந்தெந்த தொகுதி? எத்தனை தொகுதிகள்? என்பது குறித்து ஜனவரி 9ம் தேதி தெரிவிக்கப்படும். 2026 தேர்தலில் 234 தொகுதிகளும் இலக்கு தான். அதிகாரப்பூர்வமாக தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை யாரும் தொடங்கவில்லை” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
