தமிழ் மீதும் தமிழ்நாடு மீதும் அக்கறை இல்லாத மோடியும், அமித்ஷாவும் தேர்தலுக்காகவே புலம்பெயரும் பறவைகள் போல வந்து செல்கிறார்கள் என்று கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஓபிஎஸ், டிடிவி.தினகரனை கூட்டணியில் இணைக்க பாஜக முயற்சித்து வருகிறது. இதற்காக, அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டு, பாஜக தேசிய தலைவர்களுடன் ஆலோசித்து வருகிறார். மேலும், இது தொடர்பாக ஓபிஎஸ்ஸும் டெல்லியில் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பழனிசாமி தலைமை தாங்குவதால், கூட்டணி குறித்து பழனிசாமி தான் முடிவெடுப்பார் என 10-ம்தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நேற்று முன் தினம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வீட்டுக்குச் சென்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பழனிசாமியை சந்தித்துப் பேசினார். மேலும், தமிழகத்தில் பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து பழனிசாமியிடம் நயினார் நாகேந்திரன் ஆலோசித்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், இன்று (டிச.14-ம் தேதி) நயினார் நாகேந்திரன் டெல்லி செல்கிறார். தொடர்ந்து, அமித் ஷா டிச.15-ம் தேதி தமிழகம் வருகிறார்.
இதுகுறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்,தமிழகத்தில் தேர்தல் வரும்போது, அமித் ஷா, மோடி உள்ளிட்டவர்கள் அடிக்கடி வரத்தான் செய்வார்கள். தமிழ் உணவு தான் பிடிக்கும் என்பார்கள். தமிழ் மொழி தான் பிடித்த மொழி என்பார்கள். தேர்தல் இல்லாத போது அவர்களுக்கு தமிழகத்தை பற்றி, எந்த கவனமும் இருக்காது. புலம் பெயரும் பறவைகளைப் போல, தேர்தல் சீசனுக்கு, தமிழகம் வந்து செல்பவர்கள் தான் அவர்கள் என்று விமர்சித்துள்ளார்
