வேலூரில் உள்ள பிரசித்திபெற்ற தங்க கோயிலில் தரிசனம் செய்வதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை தமிழகம் வருகிறார்.
வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயிலில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவா் திரெளபதி நாளை (டிசம்பா் 17) வருகை தரவுள்ளார். ஸ்ரீ நாராயணி அம்மன், ஆயிரத்து 800 கிலோ வெள்ளி விநாயகா், சொா்ணலட்சுமி, பெருமாள் ஆகிய கோயில்களில் தரிசனம் திரௌபதி முர்மு தரிசனம் செய்யவுள்ளார். அதனை தொடர்ந்து, தங்கக் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தியான மண்டபத்தையும் திரௌபதி முர்மு திறந்து வைத்து மரக்கன்றுகள் நட்டு வைக்கிறாா். வேலூர் நிகழ்ச்சிக்கு பின் குடியரசுத் தலைவர் திருப்பதி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, வேலூர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக சிறப்பு பாதுகாப்புப் படை போலீஸார் கடந்த 2 நாட்களாக வேலூரில் முகாமிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
தங்கக் கோயில் வளாகப் பகுதி முழுவதுமாக சிறப்பு பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ‘கோயில் பகுதியில் 2 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்’ எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வேலூருக்கு வரும் குடியரசுத் தலைவரை வரவேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியும் நாளை காலை முன்கூட்டியே சென்னையிலிருந்து வேலூருக்கு சாலை மார்க்கமாக வருகிறார். இந்த நிகழ்வையொட்டி, வேலூர் பகுதி முழுவதுமாக ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
