லக்னோவில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் இடையேயான 4வது டி20 கிரிக்கெட் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமலேயே கைவிடப்பட்டது.
ஏற்கெனவே நடந்து முடிந்த 3 டி20 போட்டிகளில் இரண்டில் இந்திய அணியும், ஒன்றில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், 4வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு லக்னோவில் நடைபெற இருந்தது.
ஆனால், லக்னோவில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் போட்டித் தொடங்குவது தொடர்ந்து தாமதமாகி வந்தது.

மைதானத்தில் 2 முறை ஆய்வு செய்து பார்த்த நடுவர்கள், நிலைமை சரியாகாததை உணர்ந்து, 4வது டி20 போட்டி கைவிடப்படுவதாக தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, இரு அணிகள் இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி, வருகிற 19-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணி வென்றால், 3-1 என்ற புள்ளிக் கணக்கில் டி20 கிரிக்கெட் போட்டித் தொடரை கைப்பற்றும். 5வது டி20 போட்டியில், தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றால், 2-2 என்ற புள்ளிக் கணக்கில் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் சமனில் முடிவடையும்.
