“திராவிட மாடல் அரசு நிச்சயமாக கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கத்தான் போகிறது. இதை எடப்பாடி பழனிசாமி அல்ல, அவர்களது டெல்லி ஓனர்கள் நினைத்தாலும் தடுக்க முடியாது” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு இப்போது ஏன் லேப்டாப் கொடுக்கிறீர்கள் என்ற கேள்வியை திடீர் ‘கணினி நிபுணர்’ எடப்பாடி பழனிசாமி எழுப்பி இருக்கிறார்.
இன்னும் சில வாரங்களில் நம் மாணவர்கள் கரங்களுக்கு மடிக்கணினிகள் சென்று சேரவுள்ள நிலையில், இந்தக் கேள்வியை எதிர்க்கட்சித்தலைவர் எழுப்பியுள்ள நோக்கம் என்ன என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், மாணவர்களுக்கும் நன்றாக தெரியும்.
தன்னுடைய குறுகிய அரசியல் லாபத்திற்காக, கல்லூரி மாணவர்கள் பயன்பெற இருக்கும் ஒரு திட்டத்துக்கு எதிராக அவதூறுகளை பரப்ப வேண்டும் என்பதே அவருடைய எண்ணம்.
தமிழ்நாட்டு மாணவர்கள் படித்து முன்னேறிவிடக் கூடாது என்ற பாசிச பாஜகவின் எண்ணத்தை, அவர்களின் வழிகாட்டுதலின்படி எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கெனவே அறநிலையத்துறை நிதியில் கல்லூரி ஆரம்பிக்கலாமா என்று கேட்டு, தமிழ்நாட்டு மக்களிடமும், மாணவர்களிடமும் வாங்கிக்கட்டிக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, இப்போது, “கல்லூரி மாணவர்களுக்கு கல்வி ஆண்டின் நடுவில் ஏன் லேப்டாப் கொடுக்கிறீர்கள்?” என்கிறார்.
