தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக அரசியல் குறித்து முக்கிய ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது பாஜக தேசிய தலைமை. இந்த நேரத்தில், பாஜக – அதிமுக அடங்கிய எண்டிஏ கூட்டணியை வலுப்படுத்த இருகட்சிகளின் தலைவர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். என்டிஏ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ், டிடிவி என்று அடுத்தடுத்த முகங்கள் கழன்று சென்ற நிலையில், தமிழக பாஜக கூட்டணியில் என்ன நடக்கிறது என்று டெல்லி தலைமை கவனம் செலுத்திவருவதாக கூறப்படுகிறது. இப்படியாக, தமிழகத்தில் எண்டிஏ கூட்டணியில் குழப்பங்கள் நடந்து வரும் நிலையில்தான், தமிழக பாஜக தலைவர்கள் டெல்லி விரைந்து சூழ்நிலைகளை தெரிவிப்பதாகவும் தெரிகிறது.
அதிலும், எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு கூட்டணிக்குள் வரமாட்டோம் என்று கூறிவிட்டார் டிடிவி. அதோடு, கூட்டணியில் இருந்து வெளியேற, நயினாரின் மனநிலையும் செயல்பாடுமே காரணம் என்று கூறியிருந்தார். இருப்பினும், பாஜக தரப்பில் பாமக, தமாகா, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
ஆனால், பாமகவில் தந்தை – மகன் மோதல் காரணமாக குழப்பம் நீடித்து வருகிறது. இந்த பிரச்சனையை தீர்த்து வைப்பது உள்ளிட்ட அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமித்ஷா தமிழகம் வருகை தர இருந்தது. இருப்பினும், அந்த திட்டம் தள்ளிப்போனது.
இந்தநிலையில், என் டி ஏ கூட்டணியில் இணைய அன்புமணி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி, அன்புமணி இருவரும் இணைந்து வெளியிடவுள்ளனராம். கூட்டணி உறுதியானதன் எதிரொலியாகவே மயிலம் பாமக எம்.எல்.ஏ.வாக உள்ள சிவக்குமார், வரும் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார். இருப்பினும், மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் களமிறங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
