வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டிருந்தனர்.
தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்களிலும், மூன்று யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த நவம்பர் 4ஆம் தேதி தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளை தேர்தல் ஆணையம் துவங்கியது.
அதன்படி கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று முதலில் மாவட்டங்கள் வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது;
“தமிழ்நாட்டில் அக்டோபர் 27 வரை இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 6 கோடியே 41 லட்சத்து 14,587. எஸ்.ஐ.ஆர். பணிக்குப் பிறகு இன்று வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர்களின் எண்ணிக்கை, 5 கோடியே 43 லட்சத்து 76,755 பேர் இடம் பெற்றுள்ளனர். மொத்தமாக 97,37,831 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
பெண் வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 06,332, ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 66 லட்சத்து 63,233, மூன்றாம் பாலினத்தவர் 7,191, மாற்றுத்திறனாளிகள் 4,19,355 வாக்காளர்கள் உள்ளனர்.
விரைவில் சிறப்பு முகாம்கள்: எஸ்.ஐ.ஆரில், இறந்தவர்களின் எண்ணிக்கை 26,94,672, இடம் பெயர்ந்தவர்கள் 66,44,881, இரட்டைப் பதிவு 3,39,278 எனத் தெரியவந்துள்ளது. பட்டியலில் இடம் பெறாதவர்கள் பி.எல்.ஓ, இ.ஆர்.ஓ, சாவடி முகவர்கள் அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமின்றி இரண்டு வார இறுதி நாளில் அனைத்து பூத்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்த இருக்கிறோம். அந்த முகாமில் அவர்கள் விண்ணப்பிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
