காவல்துறையில் ஆர்டர்லிகள் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் கோயில் நிலத்திற்கும், தமக்கும் பாதுகாப்பு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, ஆர்டர்லிகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பது பற்றி நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. இதற்கு டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், எந்த காவல்துறை அதிகாரிகள் தரப்பிலும், ஆர்டர்லிகள் யாரும் இல்லை என்று அறிக்கை அளிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் முன்பு இன்று (டிச. 19) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியதை நீதிபதிகள் பாராட்டினர். இருப்பினும், ஆர்டர்லிகளாக சீருடை காவலர்கள் பணியாற்றி வருவதாக செய்தித்தாள்களிலும், பொது தளங்களிலும் தகவல் பரவி வரும்நிலையில், யாரும் இல்லை என்று டிஜிபி கூறுவதை ஏற்க முடியவில்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதற்கு அரசு தரப்பில் பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஆர்டர்லிகள் இருப்பது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோரை இணைத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், வழக்கு விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
