மலையாள சினிமாவின் மூத்த நடிகரும் காமெடி நடிகருமான ஸ்ரீனிவாசன் உடலநலக்குறைவால் இன்று காலமானார்.
1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி அருகே உள்ள பாட்டியத்தில் பிறந்த இவர், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மலையாள சினிமாவின் நகைச்சுவையும் கலந்த தனித்துவமான படைப்புகளால் உயர்ந்து நிற்கும் கலைஞராக திகழ்ந்தார்.
இவருக்கு சினிமா மீது ஈடுபாடு இருந்ததால், சென்னையில் உள்ள தமிழ்நாடு திரைப்படத்துறையில் படித்தார். இதையடுத்து, 1976 ஆம் ஆண்டு பி.ஏ. பேக்கரின் ‘மணிமுழக்கம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானர். அதைத் தொடர்ந்து, 1979 ஆம் ஆண்டு வெளியான ‘சங்ககானம்’ படத்தில் கதாநாயகன் வேடத்தில் நடித்தார்.
இதை தொடர்ந்து திரைப்பட தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் ஸ்ரீனிவாசன் முக்கியமான சாதனைகளை படைத்த இவர், சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தேசிய மற்றும் 5 கேரள அரசின் விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியதுடன் காமெடி வேடங்களில் பல படங்களில் நடித்துள்ளார். மலையாள சினிமாவின் கவுண்டமணி என்று ரசிகர்கள் இவரை அழைப்பார்கள். தமிழில் புள்ளக்குட்டிக்காரன், லேசா லேசா, ரெட்ட சுழி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, அவர் தனது 69வது வயதில் காலமானார். தகவல்களின்படி, அவர் நீண்டகால நோய்க்காக தனது வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது மரணத்திற்கான காரணம் குறித்து ஸ்ரீனிவாசனின் குடும்பத்தினர் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை. அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் திருப்புனித்துரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
