வங்கதேச நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை ராணுவம் மற்றும் போலீசார் தடுத்துள்ளநிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி மர்ம நபர்களால் சுடப்பட்ட சம்பவத்தையடுத்து, அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹாதி, டிசம்பர் 18ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் பயங்கர கலவரம் வெடித்தது.
இந்தநிலையில், பத்திரிகை அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், முன்னாள் அமைச்சர் மொஹிபுல் ஹசன் சவுதுரி நவுபலின் வீட்டை சூறையாடிய போராட்டக்காரர்கள், தீ வைத்தனர். இதனிடையே இந்து இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் அடித்து கொன்று, அவரின் உடலை சாலையில் போட்டு தீ வைத்து எரித்த சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
வன்முறை தொடர்ந்து அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் நாடாளுமன்ற வளாகம் உள்பட முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டனர். இருப்பினும், நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை ராணுவம் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன்காரணமாக பல இடங்களில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதியின் உடலுக்கு பலத்த பாதுகாப்புடன் இறுதி மரியாதை நடந்தது.
