நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பு, அசாம் அடையாளத்தை காங்கிரஸ் கட்சி அழிக்க முயன்றதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
அசாம் மாநிலம் குவாஹாட்டியில் மறைந்த முதலமைச்சர் லோகபிரியா கோபிநாத் பர்டோலாய் பெயரில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதையடுத்து விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பு, அசாமை ஒருங்கிணைந்த வங்கம் அல்லது கிழக்கு பாகிஸ்தானுடன் இணைக்க முஸ்லிம் லீக்கும், பிரிட்டிசாரும் நினைத்தனர். இதற்கு காங்கிரஸ் கட்சியும் துணை போனது. ஆனால் இந்த சதியை காங்கிரஸ் மூத்த தலைவரான பர்டோலாய் எதிர்த்தார்.
நாட்டில் இருந்து அசாமை பிரிக்கும் சதியை அவர் தடுத்தார். காங்கிரஸ் கட்சி, ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியத்தையும் பல ஆண்டுகளாக புறக்கணித்து வந்தது. அவை அனைத்தையும் ஒவ்வொன்றாக இந்த மோடி சரி செய்து வருகிறேன்.
அசாம் முழுவதும் பிரம்மபுத்திரா நதி தடையின்றி ஓடுகிறது. அதேபோல், வளர்ச்சியும் பாஜக தலைமையிலான இரட்டை என்ஜின் அரசின்கீழ் தங்குத் தடையின்றி நடந்து வருகிறது. இது வளர்ச்சியை கொண்டாடும் நாள் ஆகும்.
அதாவது வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி மட்டுமில்லை, அசாமின் வளர்ச்சியையும் கொண்டாடும் நாள் ஆகும். ஒட்டுமொத்த நாடும், அசாமின் வளர்ச்சிக் கொண்டாட்டத்தை பார்க்கட்டும். இன்றைய தினத்தில், அசாம் வளர்ச்சியில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
