திமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 75 வயது மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், அன்னூர் அருகே திமுக சார்பில் மத்திய அரசின் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அன்னூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பழனிசாமி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அன்னூர் பகுதியில் இருந்து முதியவர்கள் உள்ளிட்டோர் வாகனங்களில் அழைத்து வரப்பட்டு பங்கேற்க வைக்கப்பட்டனர்.
இதில், மேல் கிணறு பகுதியைச் சேர்ந்த பொன்னம்மாள் (75) என்ற மூதாட்டியும் அழைத்து வரப்பட்டார். கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வந்த அவர், வெயிலில் நீண்ட நேரம் நின்றதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஆர்ப்பாட்டத்தின்போதே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு அன்னூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற நிலையில், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
முதியவர்களை அழைத்து வந்து வெயிலில் நீண்ட நேரமாக நிற்க வைத்ததே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து இதுவரை திமுக நிர்வாகிகள் தரப்பில் இருந்து எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
அண்ணாமலை கண்டனம்: இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், ”கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில், திமுக கட்சி ஆர்ப்பாட்டத்திற்காக, 75 வயது பொன்னம்மாள் என்ற வயது முதிர்ந்த மூதாட்டியை அழைத்து வந்து, கொளுத்தும் வெயிலில் நிற்க வைத்து, அவரது உயிரிழப்பிற்கு காரணமான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் கோபமும் அளிக்கிறது.
திமுக ஆர்ப்பாட்டத்துக்கு வரவில்லையென்றால், நூறு நாள் வேலைத்திட்டத்திற்கான ஊதியம் தர முடியாது என்று மிரட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து வயது முதியவர்களை வாகனத்தில் அழைத்து வருவது திமுகவினரின் வழக்கம். தனது அரசியல் லாபத்திற்காக அரங்கேற்றும் தேர்தல் நாடகங்களுக்கு, ஏழை எளிய மக்களின் உயிர்களை பலி வாங்கும் திமுகவின் அராஜக அரசியலை, தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது.
மனிதாபிமானமே இல்லாமல் முதியவர்களை சிரமப்படுத்தி, ஒரு உயிரிழப்பிற்கு காரணமான அன்னூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பழனிசாமி உள்ளிட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
