தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பெயர் சொல்லுமளவுக்கு தவெகவில் 10 வேட்பாளர்கள் கூட கிடையாது என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கிண்டல் அடித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதிக்கு உட்பட்ட வரட்டனப்பள்ளி ஊராட்சியில் பாஜக சார்பில் நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பங்கேற்று பேசினார். தொடர்ந்து, குந்தாரப்பள்ளியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அவர் இன்று (டிச.25-ம் தேதி) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சந்தித்து பேசினார்.
இதில், தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தொடர்பாக பேசப்பட்டது. கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக பேசவில்லை. தற்போது ஓபிஎஸ், தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியே உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கின்றன. அரசியலில் 3 மாதங்களில் எதுவும் நடக்கலாம். 24 மணி நேரத்தில் கூட கூட்டணியில் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. அரசியலில் மாற்றங்கள் எந்த நேரத்திலும் நடக்கலாம்.
திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் விஜய் போட்டி என்கிறார். இது சினிமா அல்ல. 234 தொகுதிகளில் உள்ள நிலையில், விஜய்யால், தற்போது 10 வேட்பாளர்கள் பெயரை சொல்ல முடியுமா. கட்சிக்கு பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் இருக்க வேண்டும். தவெகவில் கட்சிக்கான கட்டமைப்பே கிடையாது.
திமுக அரசு மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாத அரசாக உள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை குறைப்பதாக கூறினார்கள், ஆனால் செய்யவில்லை திமுக தேர்தல் வாக்குறுதியில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை. இப்போது, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் குறித்து பொதுமக்களிடம் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் 125 நாட்களாக பிரதமர் மோடி உயர்த்தி உள்ளார்.
திமுகவினர், 100 நாள் வேலை திட்டத்தில், தனக்கு வேண்டியவர்களுக்கு பணி ஒதுக்கியதுபோல், பணத்தை திருடினர். இனி அது நடக்காது; பயோமெட்ரிக்கில் ரேகை வைத்து முறையாக ஊதியம் பெறலாம்.
100 நாள் வேலை திட்டத்தில் இனி திமுகவினர் கையாடல் பண்ண முடியாது என்பதால் எதிர்க்கின்றனர். ஒரு பொய்யை மீண்டும், மீண்டும் சொல்லி உண்மையென மக்களை திமுகவினர் நம்ப வைக்கின்றனர். தமிழகத்தில் காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை. 5 ஆண்டுகளில் தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகமாகி உள்ளது. திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
