நமது உடலின் ஆரோக்கிய நிலை குறித்து தெரிந்துகொள்ள நாம் பல்வேறு நவீன மருத்துவ பரிசோதனைகளை நாடுகிறோம். ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, நமது உடலில் ஏற்படும் உள் சமநிலையின்மை மற்றும் உறுப்புகளின் சோர்வுகளை நம் முகம் ஒரு வரைபடம்போல தெளிவாகக் காட்டுகிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இந்த நுட்பமே ‘ஆயுர்வேத ஃபேஸ் மேப்பிங்’ (Ayurveda Face Mapping) என்று அழைக்கப்படுகிறது.
முகத்தில் திடீரென ஏற்படும் பருக்கள், கண்களுக்கு கீழே ஏற்படும் கருவளையம் ஆகியவை வெறும் தோல் பிரச்சனைகள் அல்ல, அவை செரிமானம், கல்லீரல், நுரையீரல் அல்லது ஹார்மோன் அமைப்புகளில் உள்ள மறைக்கப்பட்ட பிரச்சனைகளின் ‘வெளிப்புற சமிக்ஞைகள்’ ஆகும்.
முகத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒரு குறிப்பிட்ட உள் உறுப்புடன் தொடர்புடையது என்ற இந்த கோட்பாட்டைப் புரிந்துகொள்வது, ஒரு நோய் தீவிரமாவதற்கு முன்பே அன்றாட பழக்கவழக்கங்களில் தேவையான மாற்றங்களைச் செய்ய உதவுகிறது. அந்த வகையில், முகத்தில் ஏற்படும் மாற்றங்கள், உடலில் எந்த பிரச்சனைகளை பிரதபலிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஆயுர்வேதத்தின் அடிப்படைக் கொள்கையின்படி, உடல், மனம் மற்றும் உணர்ச்சிகள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. இந்த ஃபேஸ் மேப்பிங் என்பது, முகத்தில் தோன்றும் நிறமாற்றம், பருக்கள், அதிக எண்ணெய் சுரப்பு அல்லது வறட்சி போன்ற அறிகுறிகளைப் பயன்படுத்தி, கண்டறியும் ஒரு பாரம்பரிய நோயறிதல் முறையாகும். வெளிப்புறப் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்குப் பதிலாக, மூல காரணத்தை தெரிந்து கொண்டு அதனை குணப்படுத்துவது அவசியம்.
முகத்தின் பகுதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உறுப்புகள்:
நெற்றி (Forehead): செரிமான மண்டலம் அதாவது, சிறு குடல் மற்றும் சிறுநீர்ப்பை மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் நெற்றியில் பருக்கள், மந்தமான தன்மை அல்லது நுண்ணிய நீரிழப்புக் கோடுகள் ஏற்படும். செரிமானம் மெதுவாக இருப்பது, மன அழுத்தம் (Stress), அல்லது தூக்கமின்மை ஆகியவை பிரச்சனையாக இருக்கலாம். இதற்கு, உணவுமுறையில் மாற்றம், போதுமான நீர் அருந்துதல் மற்றும் சரியான தூக்கம் அவசியம்.
புருவங்களுக்கு இடையில் உள்ள பகுதி (Between the Eyebrows): கல்லீரலில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது பிரச்சனைகள் ஏற்பட்டால் அவை இந்த பகுதியில் பருக்கள் அல்லது அதிக எண்ணெய் சுரப்பு போன்றவை மூலம் வெளிக்காட்டும்.
அதிகப்படியான கொழுப்புள்ள, எண்ணெய் நிறைந்த உணவுகளை உட்கொள்வது, மது அருந்துதல் அல்லது கோபம், மனத்தளர்ச்சி போன்ற உணர்ச்சிகளை அடக்குவது காரணமாக இருக்கலாம். இதற்கு கொழுப்பு உணவுகளைக் குறைத்து, நீர்ச்சத்து அதிகரிக்க வேண்டும்.
மூக்கு (Nose): இதயம் மற்றும் ரத்த ஓட்ட அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் மூக்கு பகுதியில் அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதியில் சிவத்தல், வீக்கம் அல்லது உடைந்த ரத்த நாளங்கள் (Broken Capillaries) போன்ற அறிகுறிகளை காட்டும். உயர் ரத்த அழுத்தம் அல்லது இதயத்தின் மீது அதிகப்படியான வேலைப்பளு காரணமாக இருக்கலாம். ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்து, மன அழுத்தத்தைக் குறைக்க யோகா அல்லது தியானம் செய்யலாம்.
கன்னங்கள் (Cheeks): கன்னங்களில் சிவத்தல், திட்டுகள் அல்லது நாள்பட்ட அடைப்பு போன்ற பிரச்சனைகள் நுரையீரல் மற்றும் சுவாச அமைப்பில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மாசுபாடு, புகைபிடித்தல், ஒவ்வாமைகள் (Allergies) அல்லது சுவாசக் கோளாறுகள் காரணமாக இருக்கலாம். இதற்கு, சுத்தமான காற்றை சுவாசிப்பதில் கவனம் செலுத்துவது அவசியம்.

கண்களின் கீழ் பகுதி (Under-Eye Area): கருவளையங்கள், வீக்கம் அல்லது பஃபினஸ் போன்ற பிரச்சனைகள் பெரும்பாலும் சிறுநீரகங்கள் மற்றும் அட்ரினல் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகளின் வெளிப்படையாகும். கடுமையான மன அழுத்தம், நீரிழப்பு, மோசமான தூக்கம் அல்லது சிறுநீரகங்களின் சோர்வு காரணமாகலாம். இதற்கு, அதிகப்படியான காஃபின் மற்றும் உப்பைத் தவிர்த்து, நீரேற்றத்தை அதிகரிக்க வேண்டும்.
தாடை: தாடை மற்றும் கன்னக் கோட்டில் ஏற்படும் தொடர்ச்சியான, ஆழமான பருக்கள் ஹார்மோன் அமைப்பு மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் மாற்றத்தை பிரதிபலிக்கின்றன. மாதவிடாய் சுழற்சி தொடர்பான ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் அல்லது மன அழுத்தம் காரணமாகும். இதற்கு, யோகா, சரியான உணவுமுறை மற்றும் ஹார்மோன் சமநிலையை இலக்காகக் கொண்ட சிகிச்சை தேவைப்படலாம்.
