பதற்றமான கால கட்டத்தில், தடை உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரத்தை காவல்துறைக்கு தமிழக அரசு அளித்துள்ளது.
தமிழகத்தில் ஏதேனும் ஒரு காரணத்தினால், குறிப்பிட்ட பகுதியில் பதற்றம் உருவாகும்பட்சத்தில், அங்கு அமைதியை நிலைநாட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட வருவாய் அதிகாரிகள், தாசில்தார்கள், சென்னையில் மட்டும் காவல் ஆணையர் ஆகியோர் தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், 2023-ம் ஆண்டு பிஎன்எஸ்எஸ் சட்டத்தின்கீழ் தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தால் பதற்றம் ஏற்பட்ட சில நாள்களுக்கு பிறகு இந்த உத்தரவை அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் உள்ள காவல் ஆணையர்கள், இணை மற்றும் துணை காவல் ஆணையர்களுக்கும் பதற்றமான காலகட்டத்தில் அமைதியை நிலைநாட்ட தடை உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமைதியை நிலைநாட்டும் நோக்கத்துடன், சம்பந்தப்பட்ட இடத்தில் கூட்டம் கூடவும், பேரணி செல்லவும் தடை விதிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
