மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமைக் அலுவலகமான தாயகத்தில் நேற்று நடைபெற்றது. அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ. அர்ஜூன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஏழு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் மூலம் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் தகுதியான வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்டிருந்தால், உடனடியாக படிவம் 6, 7, 8 ஆகியவற்றை நிரப்பி ஜனவரி 18க்குள் வழங்க வேண்டும், கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரிலிருந்து காந்தியின் பெயரை நீக்கியது கடும் கண்டனத்திற்குரியது. புதிய சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.
மேலும் இந்த கூட்டத்தில், நிர்வாகிகள் பலரும் வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் குறைந்தபட்சம் 10 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும். கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் இம்முறை தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் வைகோவிடம் வலியுறுத்தியுள்ளனர்.
