மதவாத சக்திகள் தமிழகத்தில் காலூன்றி விடக்கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்று மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மத்திய அரசு போதிய நிதியை வழங்காத போதிலும், தமிழக அரசு அளித்த வாக்குறுதிகளில் 80 சதவீதத்தை நிறைவேற்றி உள்ளது. சில வாக்குறுதிகள் நிதிச் சுமையால் நிறைவேற்றப்படாமல் உள்ளன. திமுகவை எதிர்க்கும் வல்லமை இருப்பதாக நடிகர் விஜய் மற்றும் எதிர்க்கட்சியினர் கூறுவது, அவர்களின் உரிமை.
மக்கள் சமத்துவமாக வாழ வேண்டும் என்பதற்காக ஜன.2-ம் தேதி திருச்சியில் இருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நடைபயணம் தொடங்க உள்ளது.
மதவாத சக்திகள் தமிழகத்தில் காலூன்றிவிடக்கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் கூட்டணியில் தொடர்கிறோம். இதுகுறித்துதான் கட்சியின் உயர்நிலைக் குழுவில் விவாதிக்கப்பட்டது. திமுக கூட்டணியில் மதிமுக 10 இடங்களை கேட்டதாக வரும் தகவல் தவறானது. ஆட்சியில் பங்கு கேட்டு, அதனால் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. கூட்டணிக்குள் பிளவை எதிர்பார்க்கும் கட்சிகளுக்கு இடம் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. திமுக கூட்டணிக்குள் ஒருபோதும் விரிசல் வராது.
கடந்த மக்களவைத் தேர்தலில் கட்சி விருப்பத்தின் அடிப்படையில் தனி சின்னத்தில் மதிமுக போட்டியிட்டது. வரும் தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டணியின் தலைமை முடிவெடுக்கும். வரும் தேர்தலில் நான்கு முனை போட்டி காரணமாக திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகள் பிளவுபடும் என்பதால், திமுக கூட்டணியின் வெற்றி எளிதாகும்.
கடந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்று இருந்த கட்சிகளின் தனிநபர் செல்வாக்கின் அடிப்படையில் பாஜக கூட்டணி 18 சதவீத வாக்குகளைப் பெற்றது. அது பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையால் கிடைத்த வாக்குகள் அல்ல என்றார்.
