காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு அவகாசம் நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர் பேசியதாவது:
தேர்தல் ஆணையம் எல்லாம் மாநிலங்களிலும், அந்தந்த மொழிகளில், விவரங்களை வெளியிடுகிறது.
ஆனால் தமிழகத்தில் மட்டும் ஆங்கிலத்தில் அறிவிப்பை வெளியிடுகிறது. இது தமிழகம் மீதான மறைமுக தாக்குதல் ஆகும். தேர்தல் ஆணையம் மீண்டும் மீண்டும் தமிழகத்தை தாக்குகிறது.
தேர்தல் ஆணையம் தமிழ் படிவங்களை தருவதில்லை. எழுத்துப்பூர்வமாக இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள், முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு தலைமையில் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்க உள்ளனர்.
எங்கள் கட்சியில் எந்த பிரச்னை என்றாலும், அதை நாங்களே பேசி தீர்த்துக் கொள்வோம். தமிழக அரசுக்கு எதிராகவும், பாஜகவுக்கு ஆதரவாகவும் யாராவது பேசினால், அவர்கள் மீது கட்சி தலைமையிடம் புகாரை தெரிவித்து விட்டோம். அதன் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என முழுமையாக நம்புகிறோம்.
இதை தமிழ்நாட்டில் உள்ள பிற அரசியல் கட்சிகளும், காங்கிரசின் தோழமை கட்சிகளும் பெரிதுப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். எங்கள் உட்கட்சி விவகாரத்தில் தயவு செய்து எந்த பிரச்னையும் ஏற்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன். இதை இத்தோடு விட்டுவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் ஏற்கெனவே நாங்கள் புகார் தெரிவித்து, நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து விட்டோம்.
இபிஎஸ் சொல்வது போல தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. இந்த கூட்டணி சமுத்திரம் போன்றது. கடல் போன்றது. சில அலைகள் அடிக்கத்தான் செய்யும். அந்த அலைகள் ஓயாது. ஆனால் அடங்கிவிடும். இதில் பிரச்னைகள் எதுவும் இருக்காது. எங்கள் கூட்டணி பலமாக உள்ளது.
ஜனநாயகம் எங்கள் கூட்டணியில் மட்டுமே உள்ளது. நான்கரை ஆண்டுகால இந்த ஆட்சி மீது யாரும் கல்லெறிந்தாலும், எதிர்வினையை கூட்டணி கட்சிகள் அளிக்கும். எங்கள் கூட்டணியை இயக்க வலிமையான பைலட்டுகள் உள்ளனர். ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ஸ்டாலின் ஆகியோர் சிறப்பாக எங்கள் கூட்டணியை இயக்குகின்றனர்.
தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு அளிக்க இன்று கடைசி நாள். இதை நீட்டிக்க கோரிக்கைகள் வந்துள்ளன. அதுகுறித்து பரிசீலித்து முடிவெடுப்போம்.
இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
