வரும் ஜனவரி 6 முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், ஜாக்டோ-ஜியோ, போட்டோ-ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் குழு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
பழைய ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஊரக வளர்ச்சித் துறையின்செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் தமிழக அரசு கடந்த பிப்ரவரியில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு, ஜாக்டோ-ஜியோ, தலைமைச் செயலக சங்கம், ஆசிரியர்கள் சங்கம் உள்பட அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் கடந்த அக்டோபரில் இடைக்கால அறிக்கையையும் கடந்த 30ம் தேதி முழு அறிக்கையையும் அரசிடம் சமர்ப்பித்தது.
இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜன. 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்தது. இதைத்தொடர்ந்து, ஜாக்டோ-ஜியோ, போட்டோ ஜியோ உள்பட அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளை டிசம்பர் 22-ம் தேதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் அழைத்துப் பேசினர். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் திட்டமிட்டபடி ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என சங்கங்கள் அறிவித்தன
இந்நிலையில், அமைச்சர்கள் குழு, ஜாக்டோ-ஜியோ,போட்டோ-ஜியோ நிர்வாகிகளு டன் தலைமைச் செயலகத்தில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்காக அந்த சங்கங்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. பேச்சு வார்த்தைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
