மெல்போர்னின் ரோவில்லில் உள்ள ஆஸ்திரேலிய இந்திய சமூக மையத்திலிருந்து மகாத்மா காந்தியின் வெண்கல சிலை திருடப்பட்டுள்ள சம்பவம் இந்திய சமூகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வெறும் திருட்டு மட்டுமல்ல, ஒரு கலாச்சார சின்னத்தின் மீதான தாக்குதலாகவும் கருதப்படுகிறது.
இந்தச் சிலையை புது தில்லியில் உள்ள ICCR (இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில்) நன்கொடையாக வழங்கியது. இது நவம்பர் 12, 2021 அன்று அப்போதைய ஆஸ்திரேலியாவின் பிரதமராக இருந்த ஸ்காட் மோரிசனால் திறந்து வைக்கப்பட்டது. இந்தச் சிலை இந்தியா-ஆஸ்திரேலியா உறவுகள், அகிம்சை மற்றும் அமைதியின் அடையாளமாகக் கருதப்பட்டது.
https://x.com/AdityaRajKaul/status/2018592648546988465?
திருட்டு எப்போது, எப்படி நடந்தது? காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி,, ஜனவரி 12 ஆம் தேதி திங்கட்கிழமை காலை திருட்டு நடந்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் அந்த மையத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாததால், திருடர்களால் அந்த பிரம்மாண்டமான வெண்கலச் சிலையைத் திருட முடிந்தது.
இந்த வழக்கை விசாரித்து வரும் விக்டோரியா காவல்துறை நாக்ஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு, திருடர்களை கண்டறிய அருகிலுள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றன. இந்தத் திருட்டு வெறும் பண நோக்கத்திற்காக நடந்ததா அல்லது இந்தியப் பண்பாட்டிற்கும் காந்தியடிகளின் கொள்கைகளுக்கும் எதிரான ஒரு திட்டமிட்ட செயலா என்ற கவலை இந்திய சமூகத்தினரிடையே எழுந்துள்ளது.
சிலையை பத்திரமாக மீட்டுத் தர வேண்டும் என்று இந்திய சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தச் சம்பவம் தற்போது ஆஸ்திரேலியாவில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
