Close Menu
    What's Hot

    டி20 உலகக் கோப்பை 2026!. இந்தியா அரையிறுதிக்குச் செல்ல என்ன செய்ய வேண்டும்?

    சென்னையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை!. அரசியல் கட்சிகளின் அடுக்கடுக்கான கோரிக்கைகள்!

    நேர்காணல் இல்லை!. 80 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியல் தயார்!. தவெக நிர்வாகிகள் கடும் அதிருப்தி!.  

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»போராளி நல்லக்கண்ணு: போராட்டம்.. சிறைவாசம்.. எளிமை… வேட்கை…
    தமிழ்நாடு

    போராளி நல்லக்கண்ணு: போராட்டம்.. சிறைவாசம்.. எளிமை… வேட்கை…

    Editor web3By Editor web3February 26, 2026Updated:February 26, 2026No Comments6 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nallakkannu 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தனது வாழ்நாள் முழுவதையும் மக்களுக்கான உரிமை மீட்புக்காகவே செலவிட்டு வாழ்ந்த போராளி அய்யா நல்லக்கண்ணு (101) அவர்கள் இன்று (25.02.2026) உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமான இன்று அவரின் ஓய்வற்ற போராட்ட வாழ்வை, சுகபோகத்தை விரும்பாத எளிய வாழ்வை பற்றி அறியலாம்.

    ஐந்து வயதிலேயே போராட்ட வாழ்வு: தூத்துக்குடி மாவட்டத்தின் திருவைகுண்டத்தில் 26 டிசம்பர் 1925 ஆம் ஆண்டு பிறந்தார் இரா.நல்லகண்ணு. ஒரு சிறப்பு என்னவென்றால், அவர் பிறந்த அதே நாளில் தான் பொதுவுடைமை கட்சியும் தொடங்கப்பட்டது. முதலில் அய்யா நல்லக்கண்ணு காங்கிரஸ் கட்சியால் ஈர்க்கப்பட்டார். தூத்துக்குடியில் வ.உ.சி நடத்திய சுதேசி இயக்கத்தாலும், கிராமியக் கூட்டங்களில் பாடப்பட்ட பாரதியார் பாடல்களாலும் ஈர்க்கப்பட்டு சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். அப்போதைய சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்த இயக்கமான காங்கிரசால் அவர் முதலில் ஈர்க்கப்பட்டார். இருப்பினும் அவர் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. அச்சூழலில் அவரது ஆரம்ப கால வாழ்வு காங்கிரஸ் கட்சியினருடன் சேர்ந்து இருந்தது.

    nallakannu 2

    1930-களில் அவருடைய 5 ஆவது வயதிலேயே உரிமைகளுக்கான அவரது போராட்ட வாழ்வு தொடங்கியது. அதாவது, ஹார்வி மில்ஸ் வேலைநிறுத்தத்தின் போது தனது சிறு வயதிலேயே மற்ற இளைஞர்களுடன் இணைந்து வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரிசி சேகரித்து விநியோகித்தார். 1937-ல் தனது 12 ஆவது வயதில் காங்கிரஸ் கட்சிக்காக மாகாண தேர்தல்களில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

    காங்கிரஸ் டூ கம்யூனிஸ்ட்: சுதந்திர போராட்டங்கள் முடிவை எட்டிக்கொண்டிருந்த காலமது, அப்போது பல ஜமீன்தாரர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டிய ஜமீன்தாரர்கள் காங்கிரசில் சேர்ந்ததை அய்யா நல்லக்கண்ணுவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காங்கிரஸிடமிருந்து விலக ஆரம்பித்தார். அதே சூழலில், கம்யூனிசம் குறித்த நேருவின் எழுத்துக்களும், அவரது ஆசிரியர் பாலவேஷம் செட்டியார் கம்யூனிசத்தை பெரிதும் புகழ்ந்து பேசுவதும் அய்யா நல்லக்கண்ணு அவர்களின் பார்வையை இந்திய கம்யூனிஸ்ட் பக்கம் திருப்பியது. அதையடுத்து கம்யூனிஸ்ட் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மக்கள் பணியில் தன்னை முழுவதுமாக இணைத்துக்கொண்டார். கட்சிப் பணிகளுக்காகத் தனது படிப்பைப் பாதியிலேயே கைவிட்டார்.

    nallakkannu

    ஆயிரம் நெல்மூட்டைகளை மீட்டது: ஒருபுறம் சுதந்திரப்போராட்டம் மறுபுறம் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டம் என சவாலான காலகட்டமாக இருந்த 1940-களில் அய்யா நல்லகண்ணு மாநிலம் முழுவதும் விவசாய சங்கங்களை உருவாக்கினார். நில பிரபுக்களுக்கு எதிராக வர்க்க போராட்டங்களை வழிநடத்த தொடங்கினார். மேலும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சேர்ந்து போராட்டம் நடத்தினார். குறிப்பாக, 2-ம் உலகப்போர் சமயத்தில் இந்தியாவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது “ஜனசக்தி” என்ற பத்திரிகை ஆசிரியராக இருந்த அய்யா நல்லகண்ணு, ‘பத்தினிக் கோட்டம்’ என்ற இடத்தில் உணவை பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரம் நெல் மூட்டைகளை அதிகாரிகள் துணையோடு வெளியில் கொண்டு வந்தார். இதன்மூலம் பஞ்சத்தால் பசியில் வாடிய மக்களின் பசியை தீர்த்தார். அதன் தொடர்ச்சியாக மேல்தட்டு வர்க்கத்தின் எதிர்ப்பை சம்பாதித்த நல்லக்கண்ணு உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர், 1940 முதல் 1950 காலகட்டங்களிலும் அவர் தலைமறைவு வாழ்வு வாழ நேர்ந்தது. அப்போதும் கூட அவர் விவசாயிகள், ஒடுக்கப்பட்டோருடன் சேர்ந்தே இருந்தார்.

    1949 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த சூழலில் ஆயுதப் புரட்சியை தூண்டியதாகவும், அரசுகளை கவிழ்க்க முயன்றதாகவும் கூறி நெல்லையில் சதி வழக்கு போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1952 ஆம் ஆண்டின் ‘நெல்லை சதி’ வழக்கில் அய்யா நல்லகண்ணு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அய்யா நல்லகண்ணுவை கைது செய்த போலீஸாரில் ஒருவர் அவரது மீசையை சிகரெட்டால் சுட்டு பொசுக்கினார். அச்சூழலில் தான், “அனைவருக்குமான வர்க்க விடுதலை கிடைக்காமல் மீசை வளர்க்க மாட்டேன்” எனக்கூறி அய்யா நல்லக்கண்ணு மீசை வைத்துக்கொள்ளவில்லை என்று அவரோடு உடன் பயணித்தவர்கள் கூறியுள்ளனர்.

    nallakannu stalin

    மக்களால் தோற்கடிக்கப்பட்ட தருணம்: கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து போராடிய அய்யா நல்லக்கண்ணு, 13 ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்துள்ளார். ‘ஒருவர் 2 முறைக்கு மேல் மாநில செயலாளராக பதவியில் இருக்க முடியாது’ என்ற விதி இவருக்காகவே தளர்த்தப்பட்டு தேசிய தலைமையால் தொடர்ந்து 4 முறை மாநில செயலாளராக பணியமர்த்தப்பட்டார். தொடர்ந்து கட்சிக்காக அரசியல் களத்திலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சாதிய, வர்க்க ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து பணியாற்றி வந்தார் அய்யா நல்லக்கண்ணு. 1999 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அவர், பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் தோல்வியடைந்தார். நேர்மையாக, எளிமையாக, பணிவாக இருப்பதாலேயே தேர்தலில் வெற்றி கிடைத்து விடாது என்பதற்கு உதாரணமானார் அய்யா நல்லக்கண்ணு.

    சாதிய அடக்குமுறை மற்றும் வர்க்க விடுதலைக்காக மட்டுமின்றி இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதற்கு எதிராகவும், சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் அய்யா நல்லக்கண்ணு. திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலுக்கு எதிராக போராடினார். 2000-மாவது ஆண்டில் நீதிமன்றத்தில் இதற்காக தானே வாதாடி சட்டப்போராட்டம் நடத்தி வெற்றியும் கண்டார். இதனால் தாமிரபரணியில் மணல் அள்ளுவது உயர்நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது. இதுமட்டுமின்றி நாங்குநேரி கோயில் நுழைவுப் போராட்டம், மற்றும் நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் பெற்றுத்தர மேற்கொண்ட போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு அவற்றில் வெற்றியும் கண்டவர் அய்யா நல்லக்கண்ணு அவர்கள். இவ்வாறு அவரது வாழ்நாள் முழுவதும் போராட்டங்களால் அலங்கரிக்கப்பட்டது.

    Nallakannu body donated

    எளிமையின் சிகரம்: எளிய தலைவர்கள் என காமராஜரையும் கக்கனையும் குறிப்பிடுவார்கள். ஆனால், அவர்களை காணாத அடுத்தடுத்த தலைமுறையினருக்கு எளிமையின் நிகழ்கால அடையாளமாக வாழ்ந்து வந்தார் அய்யா நல்லக்கண்ணு. தன்னலமில்லாத இந்த மனிதர் தன் இறுதி மூச்சுவரை வாழ்ந்தது ஒரு வாடகை வீடு. அரசால் ஒதுக்கப்பட்ட வீட்டிற்கும் வாடகை தந்தார். கட்சியின் முழுநேர ஊழியர்களுக்கான மாதப்படி 2,500 ரூபாயும், ஓய்வுபெற்ற அரசு ஆசிரியரான அவரது மனைவியின் ஓய்வூதியம் 4,500 ரூபாயும் மட்டுமே அவர்களுக்கு போதுமானதாக இருந்துள்ளது.

    அய்யா நல்லக்கண்ணு அவர்களின் சமூக வாழ்வை கௌரவிக்கும் வகையில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடமிருந்து சகாயோகி விருது (14 ஆகத்து 2007), தமிழக அரசின் அம்பேத்கர் விருது (2007), அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நல மன்றத்தின் சமூக சேவைக்கான காந்திய விருது (3 அக்டோபர் 2008), மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் ஜீவா விருது (21 சனவரி 2009), மிக முக்கியமாக கடந்த 2022 ஆம் ஆண்டில் தமிழக அரசு வழங்கிய ‘தகைசால் தமிழர்’ விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். மேற்கூறிய விருதுகளோடு உடன் வழங்கப்பட்ட நிதி சன்மானங்களை தனது கட்சிக்கோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்கோ திருப்பி அளித்து விட்டார் நல்லக்கண்ணு. குறிப்பாக ‘தகைசால் தமிழர்’ விருதோடு வழங்கப்பட்ட 15 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசையும் அதோடு தனது சொந்த நிதியில் இருந்து மேலும் 5,000 ரூபாயைச் சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்குத் திருப்பியளித்தார் அய்யா நல்லக்கண்ணு. கம்யூனிச சித்தாந்தத்தின் படி, “தனது தேவைக்கு அதிகமானது தனக்கானதல்ல” என்ற விதிப்படி வாழ்ந்தார் அய்யா நல்லக்கண்ணு.

    nallakannu

    குடும்ப வாழ்வு: 1950-களில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்து விட்டு வெளியில் வந்த நல்லக்கண்ணுவை அவரது தந்தையார் கராறாய் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தார். இந்த போராட்டக்காரருக்கு ஏற்ற குடும்பத்தலைவியாய் அமைந்தார் ரஞ்சிதம் அம்மையார். ஆசிரியையாக பணியாற்றிய ரஞ்சிதம் அம்மையார் நல்லக்கண்ணு அய்யாவிற்கு பதிலாக குடும்ப பொறுப்பை சுமந்தார். “பல நேரங்களில் போராட்டத்திற்கு என்று போகும்போது எப்போது திரும்பி வருவோமென்று தெரியாது. 2, 3 வாரங்கள் கூட ஆகும். அந்த நேரங்களில் எல்லாம் மனைவி ரஞ்சிதம் தான் குடும்பத்தை பார்த்துக்குவாங்க. இடையில் போன் பண்ணி சாப்டீங்களா? என மறக்காமல் கேட்பாங்க” என ஒரு நேர்காணலில் நல்லக்கண்ணு அய்யா அவர்களே கூறியிருப்பார். சமூகத்திற்காக உழைத்து, எளிய வாழ்க்கை வாழ்ந்த நல்லக்கண்ணு அய்யாவிற்கு உற்ற துணையாக இருந்தார் ரஞ்சிதம் அம்மையார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். தன இறுதிவரை நல்லக்கண்ணு அய்யாவை பார்த்துக்கொண்ட ரஞ்சிதம் அம்மையார் கடந்த 2016-ல் இயற்கை எய்தினார். அன்பிற்குரிய மனைவி விட்டுப்போன அன்று தொட்டே உள்ளுக்குள் வலிமையிழக்க தொடங்கினார் இந்த போராளி.

    ஒத்துழைக்காத உடல்: மனைவியின் இறப்பிற்கு பின் பெரும்பாலும் ஓய்விலிருந்த நல்லக்கண்ணு அய்யா அவ்வப்போது சில போராட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கெடுத்தும் வந்தார். இந்த நிலையில், 22.08.2025 அன்று நல்லகண்ணு வீட்டில் தவறி விழுந்த காரணத்தினால் தலையிலும், கைவிரலிலும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 24.08.2025 அன்று மாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    nallakkannu passes away

    அப்போதே அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சுமார் ஒன்றரை மாத சிகிச்சைக்கு பின் நல்லகண்ணு உடல் நலம் தேறி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். ஆனால், கடந்த சில மாதங்களாக அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படுவதும், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பவுவதுமாக இருந்தார். இந்த நிலையில், நேற்று மீண்டும் உடல்நலமில்லாமல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தோழர் நல்லக்கண்ணுவுக்கு செயற்கைச் சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தோழர் நல்லக்கண்ணு இன்று (25.02.2026) மதியம் 1.55 மணியளவில் காலமானார்.

    தமிழக அரசியலில் தாக்கம்: தமிழக அரசியலில் தன்னலமற்ற ஒரு எளிய மாமனிதராக இருந்து, “இந்த காலத்திலும் இவ்வாறு இருக்க முடியும்” என எடுத்துக்காட்டாய் வாழ்ந்து மறைந்த நல்லக்கண்ணு அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அனைவரின் உள்ளத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆனால், அந்த தாக்கங்களை செயல்வடிவமாக இங்கு எல்லோரும் செயல்படுத்துவார்களா? என்பதே ‘இல்லவே இல்லை’ என்ற பதிலை தரும் ஒரு கேள்வி. காமராஜர், கக்கன் வரிசையில் நல்லக்கண்ணு அவர்களையும் தோற்கடித்த நன்றி கெட்ட மனிதர்களான நாம் தான் காமராஜர் போல ஒரு தலைவர் வரமாட்டாரா? என்ற ஏக்கம் நிறைந்த புலம்பலின் வரிசையில், “நல்லக்கண்ணு அய்யா போல ஒரு தலைவர் கிடைக்க மாட்டாரா?” என ஏங்க தொடங்குவோம். ஏங்கிக்கொண்டு மட்டுமே இருப்போம்.

    Communist Leader Tamil Nadu Nallakannu Biography R. Nallakannu நல்லக்கண்ணு வாழ்க்கை வரலாறு போராளி நல்லக்கண்ணு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிரைப்படப் பிரச்சனையில் இபிஎஸ் உதவியதை விஜய் மறந்துவிட்டாரா?. மாஜி அமைச்சர் வேலுமணி காட்டம்!.
    Next Article 2026 தேர்தலில் இருந்து துரைமுருகன் விலகலா?. இளைஞர்களுக்கு வாய்ப்பா?. திமுக திட்டம் என்ன?
    Editor web3
    • Website

    Related Posts

    டி20 உலகக் கோப்பை 2026!. இந்தியா அரையிறுதிக்குச் செல்ல என்ன செய்ய வேண்டும்?

    February 26, 2026

    சென்னையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை!. அரசியல் கட்சிகளின் அடுக்கடுக்கான கோரிக்கைகள்!

    February 26, 2026

    நேர்காணல் இல்லை!. 80 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியல் தயார்!. தவெக நிர்வாகிகள் கடும் அதிருப்தி!.  

    February 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டி20 உலகக் கோப்பை 2026!. இந்தியா அரையிறுதிக்குச் செல்ல என்ன செய்ய வேண்டும்?

    சென்னையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை!. அரசியல் கட்சிகளின் அடுக்கடுக்கான கோரிக்கைகள்!

    நேர்காணல் இல்லை!. 80 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியல் தயார்!. தவெக நிர்வாகிகள் கடும் அதிருப்தி!.  

    கிரிஷ் சோடங்கர் – செல்வப்பெருந்தகை மாறுபட்ட கருத்து!. குழப்பத்தில் தொண்டர்கள்!.

    7 தொகுதிகள்; தனிச்சின்னம் கேட்கும் ஐஜேகே!. பாரிவேந்தர் டிமாண்ட்!

    Trending Posts

    2026 தேர்தலில் இருந்து துரைமுருகன் விலகலா?. இளைஞர்களுக்கு வாய்ப்பா?. திமுக திட்டம் என்ன?

    February 26, 2026

    மாநிலங்களவை எம்.பி தேர்தல்!. இன்றுமுதல் வேட்புமனு தாக்கல்!

    February 26, 2026

    8ம் வகுப்பு புத்தகத்தில் சர்ச்சை பாடம்!. உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட மத்திய அரசு!.

    February 26, 2026

    இந்தியா-இஸ்ரேல் உறவு!. முதல் உலகப்போரை நினைவுப்படுத்திய பிரதமர் மோடி!

    February 26, 2026

    தவெக நிர்வாகிகள் யாரும் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது!. தலைமை அதிரடி!

    February 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.