மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடிப்பதால் ஈரானில் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு இஸ்ரேலிடம் இருந்து எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என அமெரிக்கா அனுமதி அளித்தாலும், குறிப்பிட்ட தினத்திற்கு மட்டுமே அனுமதி இருப்பதால் அதன் பிறகு எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தற்போது இந்தியாவில் கேஸ் சிலிண்டர் விலையானது உயர்ந்துள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.60ம், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.115ம் அதிகரித்து இருப்பதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இது குறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ” நாடு முழுவதும், கடந்த 10 ஆண்டுகளில், சமையல் எரிவாயு பயன்பாடு, 45% அதிகரித்துள்ளது. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வந்த உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களால், கடந்த 10 ஆண்டுகளில், சமையல் எரிவாயு இணைப்பு, 14 கோடி வீடுகளில் இருந்து, சுமார் 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து, 33 கோடிக்கும் அதிகமான வீடுகளில் இன்று சமையல் எரிவாயு இணைப்பு உள்ளது.
பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, சமையல் எரிவாயு இறக்குமதியும் அதிகரித்திருக்கிறது. மொத்த பயன்பாட்டில், இறக்குமதி மட்டுமே 60% ஆக உள்ளது. இதனால், சர்வதேச சந்தையில், போர் உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்வு ஏற்படும்போது, நமது நாட்டிலும் விலை உயர்வு தவிர்க்கவியலாமல் போகிறது.
திமுக தனது கடந்த 2021 தேர்தல் வாக்குறுதி எண் 503ல், சிலிண்டருக்கு ₹100 மானியம் வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்தது. ஆனால், ஐந்து ஆண்டுகளைக் கடந்தும், இன்னும் அதனை நிறைவேற்றவில்லை. பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக, தற்போதாவது, சிலிண்டருக்கு ₹100 மானியத்தை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
