மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு விவகாரம், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. எல்.பி.ஜி சிலிண்டர் விலை ₹60 உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், தட்டுப்பாட்டைச் சீர்செய்யத் தவறியதைக் கண்டித்தும் லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகப் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டதால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குறிப்பாக, மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளான SIR விவகாரத்திலும் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, இது ஜனநாயக விரோத நடவடிக்கை என அவர்கள் குற்றம் சாட்டினர். ஒருபுறம் எரிபொருள் விலை உயர்வு, மறுபுறம் தேர்தல் முறைகேடு என இருமுனைத் தாக்குதலை எதிர்க்கட்சிகள் நடத்தியதால், அவை நடவடிக்கைகள் பலமுறை தடைபட்டன.
எதிர்க்கட்சிகளின் கடும் கூச்சல் மற்றும் முழக்கங்களுக்கு மத்தியிலும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மத்திய கிழக்கு நாடுகளின் போர் சூழல் மற்றும் இந்தியாவின் எரிசக்தி நிலைப்பாடு குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகள் பதாகைகளை ஏந்தி அவையின் மையப்பகுதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும், சபாநாயகர் இருக்கையில் இருந்த ஜெகதாம்பிகா பால் அவையைத் தொடர்ந்து நடத்த முயன்றார். இருப்பினும், அமளி கட்டுக்கடங்காமல் போனதால் லோக்சபா 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
