தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாகவும், அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதியும், மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23, 29 தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 4 ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், 5 மாநிலங்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்தார். இந்த வாக்காளர்களின் எண்ணிக்கையானது, தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி, கனடா, ஆகிய நாடுகளின் மக்கள் தொகைக்கு இணையானது என்றும் மேலும் 20 நாடுகளை சேர்ந்த தேர்தல் பார்வையாளர்கள் இந்த 5 மாநில தேர்தல் திருவிழாவை காண வருகை தரவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள்: 5 மாநிலங்களில் 2 கோடியே 18 லட்சத்து 807 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாகவும், தமிழ்நாட்டில் நகரங்களில் 30,967, கிராமப்புறங்களில் 44,065 என மொத்தமாக 75,032 வாக்குச்சாவடிகள் உள்ளன என்றும் சராசரியாக 756 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படவுள்ளதாகவும், தேனி மாவட்டத்தில் வருஷநாடு மலை கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு 3 மணிநேரம் பயணம் செய்ய வேண்டும் என்றும் எனவே, அங்குள்ள 5 வாக்காளருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் தகுதிப்பெற்றுள்ளனர்.
தேர்தலில் முதன்முறையாக முக்கிய மாற்றங்கள்: முதன்முறையாக வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்களின் படம், சின்னம் கருப்பு வெள்ளையாக இல்லாமல் வண்ணத்தில் இடம்பெறும்.
வாக்குப்பதிவு நாளில் ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் தெரியப்படுத்தப்படும்.
வாக்குச்சாவடி மையங்களில் கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உரிய வசதிகள், வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்து தரப்படும்.
8.5 லட்சம் பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
வாக்குச்சாவடிகளில் மொபைல் போன்களை பத்திரமாக வைத்திருக்க ஏற்பாடு.
வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
பிஎல் ஓ-க்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும்.
