மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட பயங்கர ட்ரோன் தாக்குதலால் துபாய் நகரம் புகை மண்டலமாக மாறியுள்ளது. இந்தத் தாக்குதலால் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று இரவு துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு மிக அருகில் உள்ள முக்கிய எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் எண்ணெய் கிடங்குகள் வெடித்துச் சிதறி, தீ கொழுந்துவிட்டு எரிகிறது. தீயணைப்புப் படையினர் பல மணி நேரமாகத் தீயைக் கட்டுப்படுத்தப் போராடி வருகின்றனர். இந்த அசம்பாவித சம்பவத்தால் துபாய் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக சென்னையிலிருந்து இயக்கப்படும் சர்வதேச விமானச் சேவைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை சென்னையிலிருந்து துபாய்க்குப் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம், துபாய் வான்பரப்பில் நிலவும் பதற்றம் காரணமாகப் பாதி வழியிலேயே மீண்டும் சென்னைக்குத் திருப்பி விடப்பட்டது. துபாய் மற்றும் அபுதாபிக்குச் செல்ல வேண்டிய எத்தியாட் (Etihad) மற்றும் இண்டிகோ (IndiGo) விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திடீர் விமான ரத்து அறிவிப்பால் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
