தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே பாஜக 27, பாமக 18, அமமுக 11, ஆகிய கட்சிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தற்போது இந்திய ஜனநாயகக் கட்சிக்கு (IJK) 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தங்களுக்கு 2 இடங்கள் வழங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது மற்றும் எந்தச் சின்னத்தில் களமிறங்குவது என்பது குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் விரிவாக ஆலோசித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கடந்த காலங்களில் சில தேர்தல்களில் கூட்டணி கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட்ட அனுபவம் இருந்தாலும், இந்த முறை கட்சியின் தனித்துவத்தை நிலைநாட்ட பாரிவேந்தர் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிகிறது. விரைவில் தொகுதிகளின் பெயர்கள் மற்றும் சின்னம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
