விராலிமலை தொகுதி மக்களுக்கு நன்றி உடையவனாக நான் எப்போதும் இருப்பேன் என்று சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் இன்று மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயபாஸ்கர், தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, அவர்களின் கருத்துகளுக்கு முழு மதிப்பளிப்பதாகவும் உறுதியளித்தார்.
“2001ஆம் ஆண்டு முதல் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளேன். கொரோனா காலத்தில் உயிரைத் துச்சமென நினைத்து மக்களுக்காகப் பணியாற்றினேன். தொகுதி மக்களின் நலனே எனக்கு முக்கியம். அவர்கள் என்னை நம்பி தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே மக்களின் முடிவே எனது முடிவு” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார். தான் நிதானமாகவும் அமைதியாகவும் இருப்பதாகவும், எந்தவித அதிரடி அல்லது பரபரப்பும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார். இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்ததாகக் குறிப்பிட்ட அவர், மக்களிடையே கருத்துக் கேட்பு நிகழ்வுகளைத் தொடர்வதாகவும் தெரிவித்தார்.
51 வயதான விஜயபாஸ்கர், தான் 25 ஆண்டுகால பொது வாழ்க்கையில் மக்களுக்காகப் பாடுபட்டதை நினைவுகூர்ந்தார். “மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னுடன் பயணித்தவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் நான் செய்வேன்” என்றார். தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக வரும் யூகங்கள் குறித்து கேட்டதற்கு “அது வெறும் யூகம்” என்று மறுப்புத் தெரிவித்தார். நாளை சபாநாயகரைச் சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு “நாளை பல திருமணங்கள் இருக்கின்றன” என்று புன்னகையுடன் பதிலளித்து தவிர்த்தார்.
அதிமுகவில் தொடர்கிறீர்களா என்ற கேள்விக்கும், எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தீர்களா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் மௌனப் புன்னகையால் பதிலளித்தார். மேலும், “தொகுதி மக்கள் மாற்றத்தை விரும்பினால் மாற்றம் இருக்கும். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் நான் செய்வேன்” என்று தெளிவுபடுத்தினார். செய்தியாளர் சந்திப்பின்போது எம்.ஜி.ஆர். வழி, ஜெயலலிதா வழி என்று மட்டுமே குறிப்பிட்ட அவர், தற்போதைய அதிமுக தலைமையின் பெயரை ஒரு முறை கூட உச்சரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விராலிமலை தொகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் முடிவெடுப்பேன் என்று வலியுறுத்திய விஜயபாஸ்கர், நாளை தனது இறுதி நிலைப்பாட்டை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
