தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவி காங்கிரசுக்கு அளிக்கப்படலாம் என பரபரப்பு கிளம்பி உள்ளது.
நடைபெற உள்ள மாநிலங்களவை எம்.பி தேர்தலில், ஒரு இடத்தை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்திருப்பதாக தகவல் கூறப்படுகிறது.
மேலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி களமிறங்குவார் எனவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.
தமிழ்நாட்டில் அதிமுக தரப்பில் சி.வி.சண்முகம் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்தார். இவரது பதவிக்காலம் 2028ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதி வரை உள்ளது.
இந்த நிலையில் 2026 சட்டபேரவை தேர்தலில் மயிலம் தொகுதியில் அதிமுக தரப்பில் சி.வி.சண்முகம் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து அவர் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மே மாதம் 7ஆம் தேதி ராஜினாமா செய்தார். அதனால், தமிழ்நாட்டில் ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான இடம் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி, இதற்கான வேட்புமனு தாக்கலும் தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், எம்.பி பதவிக்கு தவெக சார்பில் யார் வேட்பாளராக களமிறக்கப்ப டவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்க தவெக தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, காங்காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தியை களமிறக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக இணையும் முன்பு, தவெகவுடன் கூட்டணி போடுவதாகவும், அதற்கு பின்னணியில் இருந்து பிரவீன் சக்கரவர்த்தி முயற்சிகளை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி திமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு வந்த பிரவீன் சக்கரவர்த்தி, சென்னை பட்டினப்பாக்கம் வீட்டில் வீஜய்யை நேரில் சந்தித்து வந்ததும் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.
ராகுலின் நெருங்கிய நண்பரான பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யுடன் நெருக்கம் காட்டியது ராகுல்காந்தி போட்ட கூட்டணி கணக்குக்காகத்தான் எனவும் அப்போது கூறப்பட்டது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர், காங்கிரஸ் தவெகவுக்கு ஓடோடிச் சென்று ஆதரவும் அளித்தது.
இந்த நிலையில்தான் காங்கிரஸ் சார்பில், பிரவின் சக்கரவர்த்தியை மாநிலங்களவை உறுப்பினராக்கப்படலாம் எனவும் இதற்கு ராகுல் தரப்பில் இருந்தே சமிக்ஞை கிடைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், கோட்டைக்கு சென்று முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரில் சென்று சந்தித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
