மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் (CJP) நடத்திய முதல் கட்டப் போராட்டம் ஒட்டுமொத்த தேசத் தலைநகரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கக் கோரியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று பிரம்மாண்ட போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான இளைஞர்களும் மாணவர்களும் ஜந்தர் மந்தர் பகுதியில் குவியத் தொடங்கினர். குறுகிய நேரத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டதால் அந்தப் பகுதியே ஸ்தம்பித்தது.
போராட்டக் களத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்கவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் டெல்லி காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஜந்தர் மந்தரைச் சுற்றிலும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
இருப்பினும், நீட் விவகாரத்தால் ஆத்திரமடைந்திருந்த இளைஞர்கள், காவல்துறையினரின் எச்சரிக்கையையும் மீறி அந்தப் பாதுகாப்புத் தடுப்புகளைத் தாண்டி முன்னேற முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சூழ்நிலை கட்டுக்கடங்காமல் செல்வதைக் கட்டுப்படுத்த, முண்டியடித்துக் கொண்டு முன்னேறிய இளைஞர்கள் மீது காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கூட்டத்தைக் கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தங்களது முதல் போராட்டத்திலேயே டெல்லியை அதிர வைக்கும் வகையில் இளைஞர்களைத் திரட்டி, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ நடத்தியுள்ள இந்த அதிரடிப் போராட்டம் அரசியல் வட்டாரத்திலும், கல்வித் துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
