தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என பல துறைகளில் தனித்திறமையால் முத்திரை பதித்த கே. பாக்யராஜ் இன்று காலை காலமானார் என்ற செய்தி சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 73 வயதான அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1953 ஜனவரி 7ஆம் தேதி ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகிலுள்ள வெள்ளாங்கோவில் பகுதியில் பிறந்த பாக்யராஜ், ஆரம்ப காலத்தில் திரைப்பட துறையில் உதவி இயக்குநராக தனது பயணத்தை தொடங்கினார். புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜாவிடம் பணியாற்றிய அனுபவம் அவருக்கு திரைப்படக் கலை குறித்த ஆழமான புரிதலை வழங்கியது. பின்னர் 1979ஆம் ஆண்டு வெளியான சுவரில்லாத சித்திரங்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தனது தனித்துவமான பாணியால் கவனம் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து, அவர் இயக்குநர் மட்டுமல்லாது நடிகர், கதை மற்றும் வசன எழுத்தாளர் என பல்வேறு பொறுப்புகளில் சிறந்து விளங்கினார். குடும்ப உணர்வுகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் நகைச்சுவையை இயல்பாக இணைக்கும் அவரது திரைக்கதைகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. எதிர்பாராத திருப்பங்கள், எளிய ஆனால் தாக்கமிக்க உரையாடல்கள் ஆகியவை அவரது படைப்புகளின் சிறப்பம்சங்களாகும்.
தனது சிறப்பான பங்களிப்புக்காக பல பிலிம்பேர் விருதுகள் மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார். தமிழ் சினிமாவின் தனித்துவமான கதையாக்க மரபை உருவாக்கிய முக்கிய ஆளுமைகளில் ஒருவராக அவர் என்றும் நினைவுகூரப்படுவார்.
இந்நிலையில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார், மறைந்த நடிகரும் இயக்குனருமான பாக்யராஜுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், திரைப்பட நடிகரும் இயக்குநருமான பாக்கியராஜ் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கமர்ஷியல் நோக்கத்துக்கென எடுக்கப்பட்ட தனது திரைப்படங்களின் மூலமும்கூட சில சமூக சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பியவர். மரணம் திடுமென அவரைப் பறித்துக்கொண்டுவிட்டது. தமிழ்த் திரையுலகில் அவரது மறைவு ஏற்படுத்தும் வெற்றிடத்தை இட்டு நிரப்ப எவருமில்லை. அவருக்கு என் அஞ்சலி! என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் நடிகர் ராகவா லாரன்ஸ் தக்கது எக்ஸ் பக்கத்தில், இயக்குநர் பாக்யராஜ் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. திரைப்படத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மறக்க முடியாதது; அவரது படைப்புகள் பல தலைமுறையினரை ஊக்கப்படுத்தியுள்ளன. இது திரையுலகிற்கு ஒரு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோல் தொடர்ந்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாக்யராஜ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
