ஓட்டுநர்கள் தங்கள் பயண வருமானத்தில் 100 சதவீதத்தையும் தாங்களே எடுத்துக்கொண்டு பயன்பெறுவார்கள்.
குஜராத் மாநிலத்தின் 14 முக்கிய நகரங்களில் இன்று (ஜூன் 27, 2026) பாரத் டாக்ஸி சேவையை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். இந்தியாவில் கூட்டுறவு அமைப்பின் கீழ் ஓட்டுநர்களுக்கு சொந்தமான முதல் டாக்சி முன்பதிவு சேவையாக இது கருதப்படுகிறது. இந்த திட்டம், போக்குவரத்துத் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகமதாபாத், சூரத், வடோதரா, ராஜ்கோட், ஜாம்நகர், பவ்நகர் உள்ளிட்ட 14 நகரங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவை, விரைவில் முழு மாநிலத்துக்கும் விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. சஹகார் டாக்ஸி கூட்டுறவு நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்த தளம், மல்டி-ஸ்டேட் கூட்டுறவு சொசைட்டி சட்டம் 2002-ன் படி பதிவு செய்யப்பட்டது. ஓட்டுநர்களை வெறும் தற்காலிக பணியாளர்களாக நடத்தாமல், பங்குதாரர்களாக (shareholders) உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கம்.
தனியார் டாக்சி நிறுவனங்கள் 20 முதல் 30 சதவீதம் வரை கமிஷன் வசூலிப்பதைப் போலல்லாமல், பாரத் டாக்ஸியில் ஓட்டுநர்கள் தங்கள் பயண வருமானத்தின் 100 சதவீதத்தையும் தாங்களே பெறுகின்றனர். சர்ஜ் பிரைசிங் இல்லாத வெளிப்படையான கட்டண முறை, குறைந்த கட்டணத்தில் பயணிகளுக்கு நல்ல சேவை, ஓட்டுநர்களுக்கு நிலையான வருமானம் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். ஓட்டுநர்கள் சிறிய தொகையை (உதாரணமாக ₹500) முதலீடு செய்து பங்குதாரராக மாறலாம். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இலாபத்தின் 80 சதவீதம் ஓட்டுநர்களுக்கு பங்களிப்பு அடிப்படையில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க விழாவில் பேசிய அமித் ஷா, “இந்தியாவின் போக்குவரத்துத் துறையில் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். நாடு வளர்ச்சி அடைந்ததால் டாக்சி தேவை ஒவ்வொரு வீட்டுக்கும் சென்றடைந்துவிட்டது. தனியார் நிறுவனங்களில் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டனர். சட்டம் மட்டும் போதாது என்று உணர்ந்து, கூட்டுறவு மாதிரியை நோக்கி நகர்ந்தோம். இதன்மூலம் சுரண்டல் அடிப்படையிலான வணிகம் முடிவுக்கு வரும்” என்றார்.
அமுல் கூட்டுறவு மாதிரியைப் போலவே, ஓட்டுநர்களின் உரிமை மற்றும் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்யும் இந்த திட்டம், அடுத்த மூன்று ஆண்டுகளில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே பைலட் திட்டத்தில் லட்சக்கணக்கான ஓட்டுநர்கள் மற்றும் பயனர்கள் பதிவு செய்துள்ளனர். இது ஓட்டுநர்களின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்தும், பயணிகளுக்கு நம்பகமான சேவையை வழங்கும் ஒரு முக்கிய முயற்சியாகும். இந்த புதிய மாடல் இந்திய டாக்சி துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
