ரஷியாவில் ஏற்பட்டுள்ள திடீர் பெட்ரோல் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் அதிபர் புதின் அரசு திணறி வருகிறது.
ரஷியா-உக்ரைன் போர் ஐந்தாண்டுகளாக நீடித்து வரும் நிலையில், உக்ரைன் ராணுவத்தின் தாக்குதல்கள் ரஷியாவின் எரிபொருள் உற்பத்தியை பெரிதும் பாதித்துள்ளன. சமீபத்தில் உக்ரைன் படைகள் ரஷிய எல்லைக்குள் ஊடுருவி, 50க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான பெட்ரோல் மற்றும் டீசல் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளை குண்டு வீசி அழித்ததால், உலகின் முக்கிய எரிபொருள் ஏற்றுமதியாளரான ரஷியாவில் வரலாறு காணாத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிபொருள் நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் காட்சிகள் இப்போது வழக்கமாகிவிட்டன. பாதிக்கும் மேற்பட்ட ஊர்களில் பெட்ரோல் விற்பனைக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் வரிசையில் நிற்பவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நடமாடும் கழிப்பறைகள் கூட அமைக்கப்பட்டுள்ளன. கோடை காலத்தில் எரிபொருள் தேவை அதிகரிக்கும் சூழலில், தினசரி சுமார் 1,10,000 டன் பெட்ரோல் தேவைப்படும் நிலையில், அதிபர் விளாதிமிர் புதின் தலைமையிலான அரசு திணறி வருகிறது.
இந்த நெருக்கடியைச் சமாளிக்க ரஷியா பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. ஏற்கெனவே நெருக்கமான கூட்டாளியான பெலாரஸ் நாட்டிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்து வரும் ரஷியா, அதனை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. மேலும், இந்தியாவிடமிருந்தும் எரிபொருள் இறக்குமதி செய்ய ரஷியா தீவிரமாக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவாரஸ்யமாக, இந்தியா ரஷியாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் நாடுகளில் ஒன்று. ஜூன் மாதத்தில் இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷிய எண்ணெய் 50 சதவீதத்துக்கு மேல் பங்கு வகித்தது. நாளொன்றுக்கு சுமார் 2.70 மில்லியன் பீப்பாய் அளவுக்கு ரஷிய எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
இந்தச் சூழலில், ரஷியா இந்தியாவிடமிருந்து பெட்ரோல் வாங்கும் ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், ரஷிய எரிசக்தி அமைச்சகமோ, இந்திய பெட்ரோலிய அமைச்சகமோ இதுவரை இந்த விவகாரத்தில் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை. இந்த இறக்குமதித் திட்டங்கள் வெற்றி பெற்றால், ரஷியாவின் உள்நாட்டு எரிபொருள் நெருக்கடி ஓரளவு தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
