தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்துள்ள நிலையில், கூட்டணிக்கான பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் தேர்வு சம்பந்தமாக கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. கூட்டணி ஆட்சியை வலுவான கூட்டணி அமைப்பாக மாற்றுவதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
கூட்டத்தில் மூன்று முக்கிய கோட்பாடுகள் – கூட்டணிக்கு பெயர் சூட்டுதல், ஒருங்கிணைப்பாளரை நியமித்தல் மற்றும் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை உருவாக்குதல் – ஆகியவை விரிவாக விவாதிக்கப்பட்டன. எனினும், இவை எதுவும் இறுதி முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், அடுத்தகட்ட ஆலோசனைக்கு தயாராகும் போது பல்வேறு கட்சித் தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன.
பெயர் தேர்வில் பல்வேறு யோசனைகள்: விஜய், கூட்டணிக்கான ஒரு பெயரை தானே தேர்வு செய்து வைத்திருப்பதாக தலைவர்களிடம் தெரிவித்தார். ஆனால், அந்தப் பெயரை இப்போது வெளியிடவில்லை. அடுத்தக் கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யலாம் எனக் கூறியுள்ளார். இதனிடையே, சில முக்கிய தலைவர்கள் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் விசாரித்தபோது, நான்கு பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகத் தெரியவந்தது. அவை: மதசார்பற்ற சமூகநீதி கூட்டணி, தமிழக வெற்றிக் கழக சமூக நீதி கூட்டணி, தமிழக சமூக நீதி கூட்டணி, சமூக நீதி வெற்றிக் கூட்டணி.
பல தலைவர்கள் மதசார்பற்ற சமூகநீதி கூட்டணி என்ற பெயரே கூட்டணியின் அடிப்படை கொள்கைகளுக்கு ஏற்றதாக இருக்கும் எனக் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், மதசார்பற்ற சமூக நீதி கொள்கை கூட்டணி என்ற பெயரும் பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பெயர் செக்யூலர் (மதசார்பின்மை), சோசியல் ஜஸ்டிஸ் (சமூக நீதி) மற்றும் பாலிசி (கொள்கை) ஆகிய மூன்று அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருப்பதால் பலரது ஆதரவைப் பெற்றுள்ளது.
ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பலத்த போட்டி: கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார் என்பதுதான் தற்போது மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. தவெக தரப்பில் இருந்து வைகோவை முன்னிறுத்த சீனியர் தலைவர்கள் முயற்சி எடுத்துள்ளனர். துரை வைகோவின் மறைமுக ஆதரவுடன் இந்தப் பெயர் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வைகோ மூத்த தலைவராகவும், மத்திய அரசுகளின் சவால்களை எதிர்கொள்ளும் அனுபவம் கொண்டவராகவும் இருப்பதால் அவரை நியமிப்பது கூட்டணிக்கு பலம் சேர்க்கும் என வாதிடப்படுகிறது.
ஆனால், தவெகவின் ஆதவ் அர்ஜுனா இதை ஏற்கவில்லை. திருமாவளவனை கூட்டணிக்குள் இழுத்து வந்த சூழலில், அவரே ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். சமூக நீதியை முன்னிறுத்தும் தவெக அரசில் திருமாவளவன் பொருத்தமானவர் என்பது அவரது வாதம்.
இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி தனக்கே இந்தப் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், “தவெகவுக்கு அடுத்தப் பெரிய சக்தி காங்கிரஸ்தான். தேசியக் கட்சியான நாங்கள் பாஜகவை எதிர்கொள்ளும் நிலையில், ஒருங்கிணைப்பாளர் பதவி எங்களுக்கு வழங்கப்பட வேண்டும்” என அழுத்தமாகத் தெரிவித்தார். பெயர் குறித்து ராகுல் காந்தியுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
இந்தக் கருத்து வேறுபாடுகளை முதல்வர் விஜய் எவ்வாறு தீர்த்து, கூட்டணியை ஒருங்கிணைப்பார் என்பது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
