தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோருக்கு சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு இருவரும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள அவர்களது பூர்வீக இல்லத்திற்கு சென்ற போலீஸார், சம்மன் நோட்டீசை செந்தில் பாலாஜியின் தாய் பழனியம்மாள் மற்றும் தந்தை வேலுச்சாமி ஆகியோரிடம் ஒப்படைத்தனர். சம்மனைப் பெற்றதற்கான ஒப்புதலாக தந்தை வேலுச்சாமியிடம் கையெழுத்தும் பெறப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஐந்து நாட்களாக தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
கரூர் மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் அவர்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த சதி வழக்கில், தவெகவைச் சேர்ந்த எம்எல்ஏ இளையராஜாவுக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் ஏற்கெனவே எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக அரசுக்கு எதிராக நடைபெற்ற சதி முயற்சியில் முக்கிய புள்ளிகள் ஈடுபட்டிருக்கலாம் என்கிற எண்ணம் வலுப்பெற்றுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் மீதான இந்த சம்மன் மேலும் பல தகவல்களை வெளிக்கொணரும் என எதிர்பார்க்கப்படுகிறது. போலீஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வரும் நிலையில், செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆஜரான பிறகு அவர்களிடம் விரிவான விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான முழு உண்மைகளும் விரைவில் வெளியாகும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
