நடிகர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும், ஜனநாயகன் படம் மட்டுமே தனது கடைசி திரைப்படம் என அறிவித்திருந்தார். இந்தாண்டு தொடக்கத்தில் பொங்கலை ஒட்டி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால், படத்தின் வெளியீடு தேதி தள்ளி வைக்கப்பட்டது.
தொடர்ந்து தணிக்கை சான்றிதழில் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியால், கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகியும் சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது. இதற்கிடையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டார். அத்தோடு ஜனநாயகன் படமும் இணையத்தில் வெளியாகி கிட்டத்தட்ட 10கோடிக்கும் அதிகமானோர் அப்படத்தை பார்த்தும் விட்டனர்.
இந்த நிலையில், ஜனநாயகன் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ’ஜனநாயகன்’ படத்தின் தணிக்கை சான்றிதழ் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வன்முறை, ஆபாச வார்த்தைகளை குறைக்க மொத்தம் 13 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ், ஆங்கில கெட்ட வார்த்தைகளை மியூட் செய்யவும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான எச்சரிக்கை வாசகம் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சண்டை காட்சிகளில் ரத்தக்கறை, காது அறுபடும் காட்சிகள் குறைப்பு, குண்டுவெடிப்பின் போது கால் பறப்பது போன்ற காட்சி நீக்கம் என மொத்தம் 43 நொடிகள் வெட்டப்பட்ட பிறகு படத்தின் நீளம் 180 நிமிடங்களாக குறைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
